

சென்னை: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள கடற்பகுதியில் சோலார் மின் நிலையத்தை அமைத்து அதானி துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
பொதுவாக கடற்பகுதியில் சோலார் நிலையம் அமைக்கப்படுவதில்லை. ஏனென்றால், கடற்பகுதியில் வீசும் காற்றால் சோலார் பேனல்கள் பாதிக்கப்படும். இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக அதானி துறைமுகம் கடற்பகுதியில் சோலார் மின் நிலையத்தை அமைத்துள்ளது. கடல் காற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக 450 வாட் திறன் கொண்ட 34 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்நிலையத்தின் உற்பத்தித் திறன் 15 கிலோவாட்பீக் ஆகும். இந்த நிலையத்தை 700 கிலோவாட் பீக் அளவுக்கு விரிவாக்கம் செய்ய இருப்பதாக அதானி துறைமுகம் தெரிவித்துள்ளது
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளைச் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும். அதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அதனானி துறைமுகம் தெரிவித்துள்ளது. தற்போதைய கட்டமைப்பின் மூலம் ஆண்டுக்கு 16 என்ற அளவில் கரியமில வாயு உமிழ்வு தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.