சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: ஒரே மாதத்தில் 2-வது முறை ஏற்றம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: ஒரே மாதத்தில் 2-வது முறை ஏற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: சமையல் எரிவாவு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை சிலிண்டருக்கு ரூ.3.50 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்திருப்பது சாமான்ய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதேபோல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே 7 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விலைப்பட்டியல் பின்வருமாறு:

நகரங்கள் விலை
டெல்லி ரூ.1,003
மும்பை ரூ.1,002
சென்னை ரூ.1018.5
கொல்கத்தா ரூ.1,029

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் சிலிண்டர் விலை அதிகரிக்கப்படாமலேயே இருந்தது.

இதற்கிடையே, 2022 பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த மார்ச் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மே மாதம் 7 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன்படி நேற்றுவரை சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.1,015-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் ரூ. 3.50 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.1,018.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வணிக சிலிண்டர் விலை எவ்வளவு? உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையும் ரூ.8 உயர்த்தப்பட்டது. இதனால் உணவகங்களில் டீ, காபி, பஜ்ஜி, வடை தொடங்கி அனைத்து உணவுப் பண்டங்களின் விலையும் ஏறும் என்று கணிக்கப்படுகிறது.

தற்போதைய விலை பட்டியல் பின்வருமாறு:

நகரங்கள் விலை
டெல்லி ரூ.2,354
மும்பை ரூ.2,306
சென்னை ரூ.1,018.5
கொல்கத்தா ரூ.2,507

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in