

இன்று வங்கி ஏடிஎம் கார்டு இருப்பது போல நம்மில் பலரிடம் பான் கார்டு இருக்கிறது. நிதி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடும்போது பான் (PAN) கார்டு கேட்பது வாடிக்கையாகி விட்டது. பான் கார்டு பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்ட பின்னர் பான் கார்டு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சரி நமக்கு ஏன் பான் அவசியம் தேவைப்படுகிறது? பான் எண் வைத்திருந்தால் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா? - இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
பான் கார்டு: முதலில் தனது வருமானத்திற்கு ஒருவர் வரி கட்டி விட்டால் போதுமா? அத்துடன் அவரது வேலை முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிறகு அவர் என்ன செய்ய வேண்டும். அதற்கு பின்னர் அவர் வருமான வரி படிவம் என்னும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். சரி, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய என்ன தேவை என்றால், பான் என்ப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) வேண்டும்.
இன்று நம்மில் பலரிடமும் பான் கார்டு இருக்கிறது. பான் எண் எனப்படும் நிரந்தர கணக்கு எண் வருமான வரிக்கு சம்மந்தமுடையதாக இருந்தாலும், அந்த எண்ணை வருமான வரித் துறை வழங்குவதில்லை. அதற்கான நடைமுறைகளை அவுட் சோர்சிங் செய்திருக்கிறார்கள். இதனால் பான் எண் பெறும் நடைமுறை தற்போது எளிதாக்கப்பட்டிருக்கிறது. உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான கட்டணம் செலுத்தி விட்டால் பான் எண் வீடு தேடி வந்துவிடும்.
அதன் பின்னர் நமது பான் எண்ணும் அதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பான் எண்ணை வைத்தே நாம் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியும். எந்த வகைக்காக நாம் வருமான வரி தாக்கல் செய்யப்போகிறோமோ, அதாவது தனிநபர் வருமான வரி, அறக்கட்டளைக்கான வருமான வரி என அவைகளுக்குரிய படிவத்தை பூர்த்தி செய்து வருமான வரித் துறையில் செலுத்த வேண்டும். இதனையே வருமான வரி ரிட்டர்ன் என்று சொல்வார்கள். இதில் மற்றொரு விஷயம் கடந்த சில வருடங்களாக இ-பைலிங்க் ஆப் ரிட்டர்ன் மிகவும் பிரபலமடைந்து விட்டது. தற்போது, பெரும்பாலனவர்கள் இ-ரிட்டர்ன் தான் தாக்கல் செய்கிறார்கள்.
ரிட்டர்ன் ஏன் அவசியம்? - நாம் ஏன் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் வேண்டும் என்று கேட்டால், அதன் மூலம் தான் நமது வருமானம் குறித்த விபரங்கள் வருமான வரித் துறைக்கு தெரிய வரும். அதனால் தகுதியுள்ளவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்ததாக நம்மில் பல பேருக்கு இருக்கும் இன்னுமொரு கேள்வி, நான் பான் கார்டு வைத்திருக்கிறேன், அப்படி என்றால் ஆண்டு தோறும் நானும் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா என்பதே அது. ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இருந்தால் மட்டுமே நாம் வரி செலுத்தி அதற்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும்.
சிலருக்கு ஆண்டு வருமானம் மாறி மாறி வரும். சில ஆண்டுகளில் வரி செலுத்துவதற்கான அளவை விட குறைவாக வருமானம் வந்திருக்கலாம். அப்படியான சமயங்களில் அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சென்ற ஆண்டில் வரி செலுத்தி இருந்தால், இந்த ஆண்டு வரி செலுத்தும் அளவிற்கு உங்களுக்கு வருமானம் இல்லை என்பதை வருமான வரித் துறைக்கு தெரிவிக்கலாம். அதில் தவறு இல்லை.
விசாரணைக் கடிதம்: வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாமல், நீங்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாதபட்சத்தில், உங்கள் பான் எண்ணிற்கு இந்தாண்டு ஏன் ரிட்டர்ன் செலுத்தவில்லை என்று விசாரித்து ஒரு கடிதம் வரலாம். இப்போதும் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். வருமான வரித் துறையில் இருந்து கடிதம் வந்தாலே அது நோட்டீஸ் என்று அர்த்தமில்லை. ஒரு விசாரணைக் கடிதம் அனுப்புவார்கள். பின்னர் அதற்கு நாம் பதில் கொடுக்க வேண்டும். இதனைத் தவிர்ப்பதற்காக ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் தவறில்லை. இவை தவிர, ஆண்டு தோறும் நாம் வருமானவரி தாக்கல் செய்யும்போது ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். ஒருவேளை நாம் வங்கியில் கடன் வாங்கச் செல்கிறோம் என்றால் அப்போது நமக்கு இந்த ரிட்டர்ன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படி தாக்கல் செய்வது? - சரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வது கடினமா விஷயமா என்றால் இல்லை. ஒரு மணியார்டர் படிவத்தை பூர்த்தி செய்வது போலத்தான் ரிட்டர்ன்ஸ் படிவம் பூர்த்தி செய்வதும். அதில் கேட்கப்பட்டிருக்கிற கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது. பெயர், பான், நிதியாண்டு மதிப்பீடு ஆண்டு போன்றவைகள் இருக்கும். அதனை பூர்த்தி செய்தால் போதுமானது. இதில் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம். ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது எந்த ஓர் ஆவணங்களையும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நிதியாண்டு x மதிப்பீட்டு ஆண்டு: நாம் அனைவருக்கும் காலண்டர் இயர் என்று சொல்லப்படுகிற பொது ஆண்டு தெரியும். இது ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிகிறது. இது தவிர வேறு சில ஆண்டுகளும் நடைமுறையில் உள்ளன. அதில் வருமான வரி செலுத்துபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு ஆண்டுகள் உண்டு. அவை, நிதியாண்டு, மதிப்பீட்டு ஆண்டு. ஒரு ஆண்டின் ஏப்ரலில் தொடங்கி அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்தில் முடியும் பன்னிரெண்டு மாதங்களை நிதியாண்டு என்று அழைப்பார்கள். நடப்பு நிதியாண்டு என்பது, 2022- 23, அதாவது 2022 ஏப்ரலில் தொடங்கி 2023 மார்ச் மாதத்தில் முடிவடையும். இந்த நடைமுறையை மாற்றி, பொது ஆண்டைப் போல நிதியாண்டும் ஜனவரியில் தொடங்கி, டிசம்பரில் முடியலாம் என்று பல முறை இந்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மதிப்பீட்டு ஆண்டு: வருமான வரி படிவம் தாக்கல் செய்யும்போது மதிப்பீட்டு ஆண்டு என்று ஒரு பத்தி இருக்கும். அது என்ன மதிப்பீட்டு ஆண்டு என்றால், சென்ற நிதியாண்டிற்கான வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்யும்போது அதனை வருமான வரித் துறை அடுத்த ஆண்டு தான் மதிப்பீட்டு செய்யும். அதாவது, 2021-22 நிதியாண்டு வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்யும் போது அதனை வருமான வரித் துறை 2022-23 நிதியாண்டில்தான் மதிப்பீடு செய்யும்.
சரி, எப்போது நாம் வருமான வருமானவரி படிவம் தாக்கல் செய்ய வேண்டும் என்றால், நிதியாண்டு முடிந்து அடுத்த நான்கு மாதங்களுக்குள் நாம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, நிதியாண்டு மார்ச் மாதத்தில் முடியும்போது, ஜூலை 31-ம் தேதிக்குள் நாம் வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் தாக்கல் செய்யும் போது, உங்கள் வருமானம் வரி செலுத்தும் அளவிற்கு இருந்தால் அதற்கு சிறிது வட்டி வசூலிக்கப்படும்.