

இந்திய ஸ்டார்ட்-அப்களில் அங்கம் வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் விவரத்தை பார்ப்போம். அண்மையில் 100 யுனிகார்ன் ஸ்டார்ட்-அப்களை கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இணைந்தது இந்தியா.
கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்திய மக்கள் காலம் காலமாக தங்களது அமோக ஆதரவை வழங்கி வருகின்றனர். அந்த ஆதரவானது கிரிக்கெட் போட்டி தொடர்பான செய்திகளை செய்தித்தாள்களின் மூலம் அறிந்து கொண்ட காலம் முதல் இன்று போட்டியை நேரலையில் செல்போனில் பார்ப்பது வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரும் ஜூன் மாதம் வந்தால் இந்தியா, கிரிக்கெட் விளையாட தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. இந்த 90 ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளார்கள். அதில் கவனம் ஈர்த்தவர்கள் வெகு சிலர்தான். அவர்களை ரசிகர்கள் கொண்டாட தவறியதும் இல்லை.
ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை, அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் ஏராளம். அதற்கு சிறந்த உதாரணமாக தோனியின் வாழ்க்கை கதையை சொல்லலாம். அவர் மட்டும் தனக்கு கரக்பூரில் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் பணி போதும் என இருந்திருந்தால் இந்நேரம் இந்தியா பல கோப்பைகளை வெல்லும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்புக்கு பிறகு, தங்களது திறனை அந்த வீரர்கள் நிரூபித்தால் போதும் உலகமே அரவணைத்துக் கொள்ளும். இது அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். அந்த வீரர்களுக்கு களத்தில் மட்டுமல்லாது செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு வழங்கப்படும்.
அப்படி களத்தில் தங்களது பேட்டிங் மற்றும் பவுலிங் திறனால் மேஜிக் நிகழ்த்திய மற்றும் நிகழ்த்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், களத்திற்கு வெளியிலும் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் மாயம் செய்வார்கள். ஒருவகையில் இதனை அவர்களது இரண்டாவது இன்னிங்ஸ் என சொல்லலாம். யுவராஜ் சிங், தோனி, கோலி என பல வீரர்கள் தொழில் சார்ந்த முதலீட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களது பார்வை இப்போது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பக்கமும் திரும்பியுள்ளது. அதில் தோனி தொடங்கி கோலி வரையில் உள்ள சில வீரர்களின் பட்டியலை விரிவாக பார்ப்போம்.
விராட் கோலி: தனது 25-வது வயதில் முதலீடுகளில் கவனம் செலுத்த தொடங்கினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி. 2014 வாக்கில் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் கான்வோ என்ற ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்திருந்தார். அதன் தொகை குறித்த விவரம் வெளியாகவில்லை. தொடர்ந்து 2015-இல் சிசெல் என்ற ஃபிட்னஸ் ஸ்டார்ட்-அப்பில் 90 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். 2018-இல் Rage காபியில் முதலீடு செய்தார்.
கடந்த 2020 வாக்கில் தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிஜிட் இன்சூரன்ஸ் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்தார். கடந்த பிப்ரவரியில் மனைவியுடன் இணைந்து தாவர இறைச்சியை தயாரித்து வரும் புளூ டிரைப் ஃபுட்ஸ் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்திருந்தார் கோலி.
தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கதபுக், கார்ஸ்24, 7இங்க்புரூஸ், ஹோம்லென், ரன்ஆடம் போன்ற ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்துள்ளார் தோனி. அவர் முதலீடு செய்துள்ள தொகை குறித்த விவரம் வெளியாகவில்லை. இதில் சில நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராகவும் உள்ளார் தோனி. இது தவிர செவன் என்ற லைஃப்ஸ்டைல் பிராண்டையும் நடத்தி வருகிறார் தோனி. கடந்த 2019-இல் தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தையும் நிறுவினார்.
ரஹானே: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரஹானே, விவசாய தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான மேராகிசான் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்திருந்தார். அது தவிர Hudle என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
கவுதம் கம்பீர்: கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் கம்பீர். கிழக்கு டெல்லி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார். அவர் ஆரோக்கிய நலன் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான FYI ஹெல்த்தில் முதலீடு செய்துள்ளார்.
கபில் தேவ்: இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான கபில் தேவ் கடந்த 2020 வாக்கில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட, மின்சார துறையில் கவனம் செலுத்தி வரும் Harmonizer இந்தியாவில் முதலீடு செய்திருந்தார். முதலீட்டு தொகை குறித்த விவரம் வெளியாகவில்லை. PeopleEasy.Com என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்திலும் கபில் தேவ் முதலீடு செய்துள்ளார்.
சவுரவ் கங்குலி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி, கல்வி சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான கிளாஸ்பிளஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த 2017-இல் பிளிக்ஸ்ட்ரீ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார் கங்குலி.
சச்சின் டெண்டுல்கர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் Smartron இந்தியா, ஸ்பின்னி, அன்அகாடமி போன்ற ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்துள்ளார். இதில் சில நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் உள்ளார் சச்சின்.
யுவராஜ் சிங்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், வெல்வெர்ஸ்டு, ஹெல்தியன்ஸ், ஈஸிடைனர், கார்டிசான்ஸ் என பல்வேறு நிறுவனங்ளில் முதலீடு செய்துள்ளார். கடந்த 2015 வாக்கில் 40 முதல் 50 கோடி ரூபாயை ஆன்லைன் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான், சார்வா என்ற ஆரோக்கிய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முன்னாள் வீரர் ஆர்.பி.சிங், ஸ்போர்ட்ஸ்யுனொ என்ற ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்துள்ளார். அனில் கும்ப்ளே, Spektacom என்ற ஸ்டார்ட் நிறுவனத்தை நிறுவினார். சுனில் கவாஸ்கர், பின்கா கேம்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஜவகல் ஸ்ரீநாத், Koo சமூக வலைதளத்தில் முதலீடு செய்துள்ளார். ராபின் உத்தப்பா, ஹெல்த்இமைண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். உமேஷ் யாதவ் மற்றும் மோகித் ஷர்மா ஆகியோரும் தங்கள் சேமிப்பை முதலீடு செய்துள்ளனர்.