Published : 18 May 2022 12:16 PM
Last Updated : 18 May 2022 12:16 PM

ஏற்றம் காணாத எல்ஐசி பங்கு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மும்பை: பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட எல்ஐசி பங்குகள் எதிர்பார்த்த அளவில் பெரும் உயர்வு காணாத நிலையில் முதலீட்டாளர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது.

பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை.

ஏற்றம் காணாத பங்கு

இந்தநிலையில் எல்ஐசி பங்குகள் நேற்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது. எனினும் பின்னர் பங்கு விலை சற்று உயர்ந்தது. சந்தைக்கு வந்தமுதல் நாளிலேயே பெரும் லாபம் ஈட்டலாம் என்று எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் நேற்று 1000 புள்ளிகள் வரை உயர்ந்தும் கூட எல்ஐசி பங்குகள் விலை உயராததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எல்ஐசியின் பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளான நேற்று 8 சதவீதம் குறைவான விலையில் நேற்று வர்த்தகத்தை முடித்துக் கொண்ட நிலையில் இன்று காலை சற்று உயர்ந்தது. எல்ஐசி பங்கின் விலை இன்று ரூ.10 என்ற உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

தினசரி வர்த்தகத்தின் அதிகபட்சமாக ரூ.891 அளவை எட்டியது. எனினும் பின்னர் ஊசலாட்டத்தை கண்டது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்ற குழுப்பத்தில் உள்ளனர். பங்குகளை வைத்திருப்பதா அல்லது விற்று விடுவதா என்ற மனநிலை உள்ளது. பங்கு விலை ஏறுமா அல்லது இதை விட இறங்கி விடும் ஆபத்து உள்ளதா என்ற அச்சமும் உள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஆனால் ‘‘உக்ரைன் ரஷ்யா போரால் சந்தையில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் நிலவும் பணவீக்கப் பிரச்சினை போன்றவற்றால் முதல்நாளில் எல்ஐசி பங்குகள் விலை சரியலாம். ஆனால், நீண்டகாலத்தில் எல்ஐசி பங்கிற்கு நல்ல விலை கிடைக்கும்’’ என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிரேடிங்கோவின் நிறுவனர் பார்த் நியாதி இதுகுறித்து கூறியதாவது:

புதிதாக பட்டியலிடப்பட்ட பங்குகள் தற்போதைய சூழலால் எதிர்பார்த்த முன்னேற்றம் பெறவில்லை. எல்ஐசி பங்குகளின் பலவீனமான பட்டியலுக்கு இரண்டாம் நிலை சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் எதிர்மறையான பங்குச் சந்தை உணர்வுகள் முக்கிய காரணமாகும்.

எல்ஐசி இந்தியாவில் காப்பீட்டு துறையில் முன்னணி நிறுவனம். இது ஒரு அற்புதமான பிராண்ட் ஆக உள்ளது. வலுவான பிராண்ட் மதிப்புடன், பெரிய அளவிலான செயல்பாடுகள், எல்ஐசி முகவர்களின் நெட்வொர்க் மற்றும் வலுவான விநியோக நெட்வொர்க் போன்ற பல நல்ல அம்சங்களை எல்ஐசி கொண்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தொடக்க நிலையைப் பார்த்து எல்ஐசி பங்குகளை விற்றுவிடக்கூடாது. நடுத்தர மற்றும் நீண்டகால நோக்கில் வைத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். காப்பீடு துறையில் எல்ஐசிதான் தலைவராக இருந்து வருகிறது, ஆதால், நீண்டகாலத்தில் எல்ஐசி பங்கு ஏறும். முதலீட்டாளர்கள் அவசரம் காட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே பங்குகளின் விலை சரிவு காரணமாக எல்ஐசி நிறுவனம் முதலீட்டாளர்களை கவர கூடுதல் ட்விடன்ட் தொகை மற்றும் போனஸ் ஷேர் போன்ற சலுகைகளை தரலாம் என்ற கருத்தும் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x