கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன்கள் தயாரிப்பில் சிறகை விரிக்கும் ஸ்டார்ட்-அப் சக்சஸ் கதை!

கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன்கள் தயாரிப்பில் சிறகை விரிக்கும் ஸ்டார்ட்-அப் சக்சஸ் கதை!
Updated on
2 min read

தமிழகத்தில் இயங்கியபடி ட்ரோன்களை உருவாக்கி வரும் 'கருடா ஏரோஸ்பேஸ்' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம். அண்மையில் இந்நிறுவனம் உலக நாடுகளிடமிருந்து அதிகளவில் ஆர்டரை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான வழியில் ஒரு தொழிலை அணுகும் முயற்சியை ஸ்டார்ட்-அப் முயற்சி என்று சொல்லலாம். அதாவது ஸ்டார்ட்-அப் முயற்சி மேற்கொள்ளும் தொழில் முனைவோர்களின் வழி படையப்பா படத்தில் வரும் ரஜினிகாந்த் வழியின் போல தனி வழியாக இருக்க வேண்டும். இதில் சக்சஸ் என்பதை காட்டிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே முதல் விதி. ஸ்டார்ட்-அப் தொழில் முயற்சியில் ஸ்திரத்தன்மை என்பது ஆரம்ப நாட்களில் இருப்பது கடினம். இந்த முயற்சியில் வெகு சில நிறுவனங்கள் தான் வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்றுதான் கருடா ஏரோஸ்பேஸ்.

கருடா ஏரோஸ்பேஸ் ஓர் அறிமுகம்: நம் தமிழகத்தின் தலைநகரான சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் இது. கடந்த 2015 வாக்கில் நிறுவப்பட்டுள்ளது. அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் இதனை தொடங்கியுள்ளார். பல்வேறு பயன்பாடுகளை வழங்கும் நோக்கில் ட்ரோன்-As-A-சர்வீஸ் என்ற ஸ்டார்ட்-அப் முயற்சியாக அவர் இதனை தொடங்கியுள்ளார்.

ட்ரோன்களை வடிவமைப்பது இதன் பிரதான பணி. இப்போது மலேசியா, பனாமா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிடமிருந்து 8000 ட்ரோன்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளது கருடா.

கடந்த பிப்ரவரியில் 'மேக்-இன்-இந்தியா' மூலமாக ட்ரோன் தயாரிப்பு தொடர்பான வசதிகளை அரசு அறிமுகம் செய்தது முதல் ஆர்டர் குவிந்து வருவதாக சொல்கிறார் அக்னிஷ்வர்.

சமூகத்தில் கருடாவின் பணிகள்: தமிழகம் உட்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் தொடங்கி வைத்தார். அந்த ட்ரோன்கள் அனைத்தையும் வடிவமைத்தது கருடா தான் என தெரிகிறது.

மேலும், உணவு டெலிவரி செய்து வரும் யுனிகார்ன் நிறுவனமான ஸ்விகி, ட்ரோன் மூலம் டெலிவரி பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்காக 300-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மதிப்பிட்டுள்ளது. இறுதியில் கருடாவை அந்தப் பணிக்கு தேர்வு செய்துள்ளது. இப்போது ஸ்விகி, கருடாவுடன் இணைந்துள்ளது. டெல்லி மற்றும் பெங்களுருவில் இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

இஸ்ரோவுடனும் கருடா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவின் சூலூர்பேட் பகுதியில் உள்ள இஸ்ரோ காலனியில் ட்ரோன் மூலம் உணவு மற்றும் மருந்து டெலிவரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. அதற்கென பிரத்யேகமாக மூன்று ட்ரோன்களை வடிவமைத்து கொடுத்துள்ளது கருடா. அதோடு ட்ரோன் சேவை தொடர்பாக பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது கருடா.

கரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நேரத்தில் தமிழ்நாடு, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனை, பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டது கருடா. இதற்காக 300 ட்ரோன்களை களம் இறக்கியது. அதனை கன்ட்ரோல் செய்ய 500 பைலட்டுகளை பயன்படுத்தியுள்ளது.

எதிர்கால திட்டம்: அடுத்த மாதம் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட திட்டமிட்டுள்ளது கருடா. அதே போல அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் ட்ரோன்கள் தயார் செய்யவும் கருடா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 180 ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வரும் 2030 வாக்கில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் தலைமையகமாக இந்தியா திகழ வேண்டும் என்பதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா மற்றும் இஸ்ரேல் தான் இந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in