Published : 17 May 2022 02:33 PM
Last Updated : 17 May 2022 02:33 PM

ரிலையன்ஸ் மெகா திட்டம்: சொந்த பிராண்ட்டில் நுகர்வோர் பொருள் விற்பனை; நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சிக்கு கடும் போட்டி?

மும்பை: பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக தொழில் செய்து வரும் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ், நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தில் பெரிய அளவில் களமிறங்குகிறது. இதற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் கன்ஸ்யூமர் பிராண்டுகள் என்ற பெயரில் சொந்தமாக பிராண்ட் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்காக சிறிய நிறுவனங்களை கையப்படுத்தும் பணியிலும் ரிலையன்ஸ் இறங்கியுள்ளது. இதன் மூலம் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சி என பல நிறுவனங்களுக்கும் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது.

இந்திய பொருளாதார சந்தையில் அதிக பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானி. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் தொழில்கள் தொடங்கி வெற்றிகரமாக செய்து வருகிறார்.

இந்த தொழில் தற்போது கடும்போட்டி நிலவுவதுடன் தொழில் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதானி முதலிடத்தில் இருப்பதாகவும், அவருக்கு 123.7 பில்லியன் டாலர் சொத்த இருப்பதாகவும் போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கிறார். அதானியை விட அம்பானியின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர் குறைந்து இருக்கிறது. அம்பானியின் சொத்து மதிப்பு பெரிய அளவில் ஏறாமல் உச்சம் தொட்டு பின்னர் அப்படியே நிற்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனால் அவர் தனது தொழிலை வேறு வகையில் விரிவுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. தனது முதலீட்டை புதிய துறைகளில், குறிப்பாக அதிகமான லாபம் தரக்கூடிய, அதிகம் விற்பனையாகக் கூடிய துறைகளில் செய்ய முயன்று வருவதாக கூறப்படுகிறது.

புதிய தொழில்

இதன் தொடர்ச்சியாக பல துறைகளில் அவர் முதலீடு செய்து வருகிறார். பார்மா, மருந்துகள், அழகு சாதனங்கள், சில்லறை வர்த்தகம் என பல துறைகளிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். ஒரே முனையில் குவியும் தொழிலை வெவ்வேறு துறைகளில் மாற்றுவதன் மூலம் வேகமாகவும், வலிமையாகவும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் உருவாகும் என முகேஷ் அம்பானி கணிக்கிடுகிறார்.

இந்தநிலையில ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது சொந்த பிராண்டில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் கன்ஸ்யூமர் பிராண்டுகள் என்ற பெயரின் கீழ் நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரிலையன்ஸ் பிராண்டுகள் ரிலையன்ஸ் நெட்வொர்க்கின் கீழ் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள், விற்பனை நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

இந்தியாவின் 900 பில்லியன் டாலர் சில்லறை விற்பனை சந்தையான ஜியோமார்ட் இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்யப்படும். அதாவது தனது கடைகளில் மற்ற நிறுவனங்களின், பிராண்டுகளின் பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக சொந்த பொருட்களை விற்பனை செய்யவுள்ளது. இதன் மூலம் தனது நுகர்வோர் பொருளும் விற்பனையாகும், தனது விற்பனை நிலையங்கள், விற்பனை சங்கிலிகளும் லாபம் ஈட்டும். இதே போன்ற விற்பனை மாடல்கள் பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அதே பாணியில் களமிறங்குகிறது ரிலையன்ஸ்.

நுகர்வோர் பொருட்கள்

இதில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை ரிலையன்ஸ் நுகர்வோர் பிராண்டாக விற்பனை செய்யவுள்ளது.
இதற்காக பொருட்களை தயாரிப்பதற்கு பதில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் 50 - 60 மளிகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள், பர்சனல் கேர் உள்ளிட்ட பல பிராண்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு பிராண்டுகளைடும் தொடர்ந்து சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தி வருகின்றது.

ரிலையன்ஸ் சுமார் 30 பிரபலமான உள்ளூர் பிராண்டுகளை கையகப்படுத்தலாம் அல்லது கூட்டு முயற்சியாகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இவற்றில் பல இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தின் மொத்த விற்பனை இலக்கு, 5 ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் ரூபாயாக இருக்கும் என கணித்துள்ளது.

குஜராத்தை தளமாகக் கொண்ட 100 ஆண்டுகள் பழமையான இந்திய நிறுவனமான ஹஜூரியின் குளிர்பான பிராண்டான Sosyo மற்றும் அதன் சுவையான பானங்களுக்கு பிரபலமானது.

வர்த்தக சாம்ராஜ்யம்

இந்த புதிய வணிக திட்டத்தின் மூலம் பல வருடங்களாகவே இயங்கி வரும் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பெப்சிகோ இன்க், கோகோ கோலா போன்ற வர்த்தக சாம்ராஜ்யங்களுக்கு கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் விற்பனையானது மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.5 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனை செய்துள்ளது. ரிலையன்ஸ் புதிய வணிக திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் ஆஃப் லைன் மற்றும் ஆன்லைனில் விரிவாக்கம் செய்யப்படும். இது உலகின் மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கான விற்பனையாளர்கள், நிதி ஆலோசகர்கள், மேலாளர்கள், ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் வேலையிலும் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது.

ரிலையன்ஸின் சூப்பர்மார்க்கெட் திட்டத்தை கேட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளன. சர்வதேச பிராண்டுகள் இனி இந்திய பிராண்டுகளுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x