பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்தாலும் நுகர்வும் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்தாலும் நுகர்வும் அதிகரிப்பு

Published on

மும்பை: இந்தியாவில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வாக உள்ளபோதிலும் கூட அதன் நுகர்வு மே மாதத்தில் முதல் 15 நாட்களில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது.

கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை. மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டது. எனினும் கடந்த 41 நாட்களாக விலை உயர்வின்றி விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வாக இருந்தாலும் அதன் நுகர்வு மே மாதத்தில் முதல் 15 நாட்களில் அதிகரித்துள்ளது.

தொழில் சார்ந்த பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து வருவதும், விவசாய அறுவடை பருவத்தின் தொடக்கம் என்பதாலும் தேவை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில் டீசல் தேவை 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் சமையல் எரிவாயு எல்பிஜி, அதிக விலை காரணமாக நுகர்வு குறைந்து இருந்தது. ஆனால் மே 1-15 வரையிலான 15 நாட்களில் சமையல் எரிவாயு விற்பனை 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் சந்தையில் 90 சதவீதத்தை அரசுக்கு சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுனங்களே கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. சில்லறை விற்பனையாளர்களின் பெட்ரோல் விற்பனை, மே 1-15 வரை 1.28 மில்லியன் டன்களில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 59.7 சதவீதம் அதிகமாகவும், 2019 ஆம் ஆண்டின் காலத்தை விட 16.3 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இன் முதல் பாதியில் விற்பனையான 1.12 மில்லியன் டன்களை விட நுகர்வு 13.9 சதவீதம் அதிகமாகும்.

நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், மே முதல் பாதியில் விற்பனை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 37.8 சதவீதம் அதிகரித்து 3.05 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது 2019- இல் விற்பனையை விட 1.5 சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 1-15 வரையிலான 15 நாட்களில் 2.99 மில்லியன் டன் நுகர்வை விட 1.8 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து தொழில்துறை வட்டாரங்கள் கூறுகையில் ‘‘ மே மாதத்தில் நுகர்வு அதிகமாக உள்ளது, ஏனெனில் முந்தைய மாதத்தில் விலை உயர்வால் தேவை குறைவாக இருந்ததும் ஒரு காரணம். ஆனால் தற்போது தொழில்துறை வேகமெடுப்பதும், அறுவடை சீசன் தொடங்கியுள்ளதும் தேவை அதிகரிக்க உதவியாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in