

மும்பை: அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி நிறுவனத்தில் ஸ்விஸ் நிறுவனமான ஹோல்சிம் 63.19% பங்குகளை வைத்திருந்தது. இந்த பங்குகளை விற்றுவிட்டு ஸ்விஸ் திரும்ப உள்ளதாக ஹோல்சிம் நிறுவனர் தெரிவித்திருந்தார். இதன்படி நிறுவன பங்குகளை வாங்க அதானி குழுமம், பிர்லா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன.
இறுதியில் அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவன பங்குகளை 1,050 கோடி டாலருக்கு (ரூ.81,361 கோடி) கவுதம் அதானி குழுமம் வாங்கியது. ஹோல்சிம் ஏஜி நிறுவனம் அம்புஜா சிமென்ட் நிறுவனத்தில் 63.19 சதவீத பங்குகளையும், ஏசிசி லிமிடெட் நிறுவனத்தில் 4.48 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இதன் மூலம் சிமென்ட் உற்பத்தியில் இந்தியாவின் 2-வது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. முதலிடத்தில் பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கையகப்படுத்தல் அறிவிப்புக்குப் பிறகு அம்புஜா நிறுவனப் பங்கு விலை 2.9 சதவீதமும், ஏசிசி நிறுவனப் பங்கு விலை 6.4 சதவீதமும் உயர்ந்தன. அதேபோல அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 2.75% உயர்ந்தது. அல்ட்ராடெக் சிமென்ட் பங்கு விலை 2.5 சதவீதமும், ஸ்ரீ சிமென்ட் பங்கு விலை 1.8 சதவீதமும் சரிந்தன.
இந்தியாவிலிருந்து வெளியேறும் 2-வது பெரிய வெளிநாட்டு நிறுவனம் இதுவாகும். இதற்கு முன்பு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தை வேதாந்தா குழுமத்துக்கு விற்றுவிட்டு கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி 2010-ல் வெளியேறியது.
நிறுவனங்களிடையிலான போட்டியை கண்காணிக்கும் இந்தியா அமைப்பு (சிசிஐ) அம்புஜா சிமென்ட் நிறுவனம் மீதான தனது விசாரணையை தொடங்க உள்ளது. ஹோல்சிம் குழுமம் அவசரமாக இந்தியாவிலிருந்து தனது பங்குகளை விற்றுவிட்டு வெளியேற முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.