

புதுடெல்லி: நாட்டில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,188 அதிகரிக்கப்பட்டு ரூ.1,23,039 ஆக உள்ளது. இது, 5.29 சதவீத அதிகரிப்பாகும்.
விமான எரிபொருளின் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. மாதத்தின் 1 மற்றும் 16-ம் தேதிகளில் விமான எரிபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி, இன்று விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,188 அதிகரிகப்பட்டு ரூ.1,23,039 ஆக உள்ளது. இந்த ஆண்டில் 10-வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும், இதுவரை இல்லாத அளவிற்கு விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
விமானங்களின் செலவினங்களைப் பொறுத்தவரையில் 40 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கி இன்று வரை, ஏவியேஷன் டர்பைன் ஃபியுல் எனப்படும் ஏடிஎஃப் எரிபொருளின் விலை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. அதவாது, கிலோ லிட்டருக்கு ரூ.49,017 அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வால் விமானக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ரூ.100-க்கு மேல் விற்கப்படும் சாதாரண பெட்ரோல் விலை 41 நாட்களாக மாற்றம் ஏதுமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.