

சந்தை மதிப்பில் 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை எட்டிய இந்தியாவின் 100-வது ஸ்டார்ட்-அப் நிறுவனமாக அறியப்படுகிறது ஓப்பன் (Open) நிறுவனம். அதாவது, இந்தியாவின் 100-வது யுனிகார்ன் (unicorn) என்ற அந்தஸ்தை எட்டி இருந்தது அந்நிறுவனம்.
யுனிகார்ன் கிளப்: ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்கள் மற்றும் அதற்கும் மேல் கடந்தால் அது யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக மாற்றம் அடைகிறது. உலக அளவில் உள்ள 10 யுனிகார்ன் ஸ்டார்ட்-அப்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 332.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பு ஆண்டின் (2022) முதல் நான்கு மாதங்களில் மட்டும் யுனிகார்ன் அந்தஸ்தை 14 நிறுவனங்கள் எட்டியுள்ளதாம்.
இத்தகைய சூழலில் யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான 'ஓப்பன்' நிறுவனத்தின் வெற்றிக்கதையை அறிவோம். அதற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.
இந்தியாவும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும்: கடந்த 2016 வாக்கில் ஸ்டார்ட்-அப் சார்ந்த முயற்சிகள் அரசு சார்பில் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2-ஆம் தேதி வரையில் சுமார் 69 ஆயிரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 56 துறைகளில் இந்த நிறுவனங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் 13 சதவீதம் ஐடி சேவை சார்ந்த நிறுவனங்கள், 9 சதவீதம் சுகாதாரம், 7 சதவீதம் கல்வி, 5 சதவீதம் வணிக சேவைகள், 5 சதவீதம் விவசாயம் மற்றும் 5 சதவீதம் உணவு சார்ந்துள்ளன. இந்தியாவில் உள்ள நூறு யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை 2005-க்கு பிறகு நிறுவப்பட்டது என தெரிகிறது.
ஓப்பன்: இந்தியாவின் நூறாவது யுனிகார்ன் நிறுவனமாக அறியப்படுகின்றது ஓப்பன். கடந்த 2017-இல் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. ஆசியாவின் முதல் நியோ-பேங்கிங் (neo banking) தளமாக ஓப்பன் உள்ளது. சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கு முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே இயங்கும் நியோ வங்கி சேவைகளை அளித்து வருகிறது. அதாவது பணம் செலுத்துதல், கணக்கு விவரங்களை நிர்வகிப்பது, செலவு மற்றும் வரி சார்ந்த கணக்கு விவரங்களை நிர்வகிக்கவும் ஓப்பன் உதவுகிறது. அப்படி லட்ச கணக்கிலான வணிக நிறுவனங்களுக்கு தனது சேவையை அளித்து வருகிறது ஓப்பன். சுமார் 500 ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தெரிகிறது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இருந்தாலும் இது ஸ்டார்ட்-அப் நிறுவனமாக கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் இணைந்து இதனை தொடங்கியுள்ளனர். இதுவரை 7 முறை நிதி திரட்டி உள்ளது ஓப்பன். டைகர் குளோபல், எஸ்பிஐ இன்வெஸ்ட்மென்ட், கூகுள், விசா போன்ற முன்னணி நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் களத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளுக்கு டிஜிட்டல் பேங்கிங் பார்ட்னராக ஓப்பன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்பன் நிறுவனம் எட்டியுள்ள இந்த புதிய சாதனை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் பாராட்டியுள்ளார். இது மாநில அளவில் ஸ்டார்ட்-அப் முயற்சியில் ஊக்கத்தை கொடுத்துள்ளதாக அவர் சொல்லியுள்ளார்.