நாம் ஏன் வருமான வரி செலுத்த வேண்டும்? - வரி வகைகள் முதல் விலக்கு வரை | ஓர் அடிப்படை விளக்கம்

நாம் ஏன் வருமான வரி செலுத்த வேண்டும்? - வரி வகைகள் முதல் விலக்கு வரை | ஓர் அடிப்படை விளக்கம்
Updated on
3 min read

நமது வருமானத்திற்கு நாம் ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்? எல்லா வருமானங்களும் வரிகளுக்கு உட்பட்டவையா? யார் நமது வருமானங்களைச் சரிபார்த்து எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது? - இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...

நேரடி, மறைமுக வரி: "ஒரு நாட்டிற்கான வருமானம் அந்நாட்டில் விதிக்கப்படும் வரிகள் மூலமாகவே கிடைக்கின்றன. அந்த வருவாய்தான் நாட்டின் உள்கட்டமைப்பை அதிகரிப்பது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றுக்கு செலவு செய்யப்படுகின்றன. ஒரு தனிநபரோ தொழில் நிறுவனங்களோ அரசுக்கு செலுத்தும் வரி நேரடி வரி என்றும், பொருள்கள் இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை போன்றவை மறைமுக வரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஒரு காலத்தில் நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 10,000 ஆக மட்டுமே இருந்தது. இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக 1 லட்சம், 10 லட்சம் என அதிகரித்து தற்போது 5 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் மறைமுக வரிக்கு நிகராக நேரடி வரியின் மூலம் வருமானம் வரத் தொடங்கியிருக்கிறது. இதன் அர்த்தம், 5 கோடிக்கும் மேற்பட்டோர் வருமானம் வரி செலுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளனர் என்பதே.

தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, வழியில் நிறைய குடிசைகளைப் பார்த்திருப்போம். இன்று அவை கட்டிடங்களாக வீடுகளாக மாறியுள்ளன. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது. நேரடி வருமானம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று தனிநபர்கள் தங்களின் வருமானத்திற்காக செலுத்தும் தனிநபர் வரி; மற்றொன்று கார்ப்பரேட் டேக்ஸ் என்று சொல்லப்படுகிற நிறுவனங்கள் செலுத்தும் வரி.

ஏன் வரி செலுத்த வேண்டும்?

நம் எல்லோருக்குள்ளும், நமது வருமானத்திற்கு ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்? கண்டிப்பாக வரி செலுத்திதான் ஆக வேண்டுமா? என்ற கேள்வி வரலாம். அப்படிக் கேள்வி கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டினுடைய உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது, கட்டுமான பணிகளில் வருமான வரிதான் அதிகமாகப் பங்களிப்புச் செய்கிறது. நாட்டில் நீண்ட சாலை வசதிகள், வலுவான துறைமுகங்கள், நவீன விமானநிலையங்கள் உருவாகி வருகின்றன. இதற்கு எல்லாம் அரசு கருவூலத்திலிருந்து தான் பணம் வர வேண்டும். தனிநபர் ஒருவர் செலுத்துகிற வரி நேரடியாக அரசாங்க கருவூலத்தைச் சென்று சேர்வதால், அவர் நாட்டின் கட்டுமான, உள்கட்டமைப்பு பணிகளுக்கு பங்களிப்புச் செய்கிறார் என்று அர்த்தம்.

வருமானங்களின் வகைகள்:

அடுத்ததாக, எந்தெந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கட்ட வேண்டும் என்ற கேள்வி வருவது இயல்பானதுதான். அதற்குப் பதில் சொல்லும் விதமாக இந்திய வருமானவரி சட்டம் 1961, எவையெல்லாம் வருமானங்கள் என வகைப்படுத்தியுள்ளது. அதில் முதலாவது சம்பளம். அதாவது, ஒருவர் செலுத்தும் உழைப்பிற்காக வழங்கப்படும் ஊதியம். இரண்டாவது, இன்கம் ஃப்ரம் ஹவுஸ் பிராப்பர்ட்டி. அதாவது ஒருவர் வீடு மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்து அதன் மூலம் பெறப்படும் வருமானம். மூன்றாவது வியாபாரம் அல்லது தொழில் மூலம் வரும் வருமானம். நான்காவது மூலதன ஆதாயம் அல்லது கேபிடல் கேயின். அதாவது சொத்துக்கள் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள்.

ஐந்தாவதாக இன்கம் ஃப்ரம் அதர் சோர்சஸ். மேலே சொன்ன நான்கு வகைகளில் இருந்தும் வருமானம் வரவில்லை. ஆனால், வங்கியில் நிலையான வைப்புத் தொகை உள்ளது. அதற்கான வட்டி, பங்குகளின் மூலம் பெறும் ஆதாயம், லாட்டரி சீட்டு, பந்தயங்களின் வெற்றி மூலம் கிடைக்கும் வருமானங்கள் போன்றவை பிறவகை வருமானங்கள் எனப்படும். இந்த ஐந்து வகைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து தனிநபர் ஒருவருக்கு வருமானம் வந்தால் அவர் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

வருமானங்களும் விலக்குகளும்:

சரி, வருமானத்தின் வகைகளைப் பார்த்து விட்டோம். அடுத்து நமக்கு வரும் எல்லா வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டுமா என்ற கேள்வி வருவோம். ஒருவருக்கு வரும் வருமானத்தில் குறிப்பிட்ட வகைகளுக்கு அவர் கண்டிப்பாக செலவு செய்தே ஆகவேண்டிய விஷயங்கள் இருக்கும். அந்த செலவுகளுக்கான தொகையை அந்த தனி நபரோ அல்லது நிறுவனமோ அவருக்கு கொடுக்கலாம்.

உதாரணமாக, ஒருவர் அலுவலகம் வந்து செல்ல பெட்ரோலுக்கு ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்கப்படுகிறது. இது வருமானமாகத் தெரிந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செலவுக்காக வழங்கப்பட்ட பணம். அதற்கும் வரி செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஒரு தனிநபரின் வருமானம் இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்று மொத்த வருமானம் (கிராஸ் இன்கம்), அடுத்தது நிகர வருமானம் (நெட் இன்கம்). இதற்குத்தான் அவர் வரி செலுத்த வேண்டும். அதாவது வருமான வரி தாக்கல் செய்யும் போது, ஒருவர் அவருக்கு வரும் அனைத்து வருமானங்களையும் கணக்கில் காட்டி விட்டு, அவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள வருமானங்களை கழித்த பின்னர் மீதமிருக்கும் நிகர வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

யார் வரிகளைத் தீர்மானிப்பது?

ஒவ்வொருவரும் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று வருமானவரித் துறை தீர்மானிக்கின்றது. வருமான வரித்துறை இந்திய அரசாங்கத்தின், நிதியமைச்சகத்தின் கீழுள்ள வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியத்தால் (CBDT) நிர்வகிக்கப்படுகிறது. இந்த வாரியத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுதான் வருமான வரித்துறையை நிர்வகிக்கின்றனர்.

வருமான வரித்துறையில் பிரின்சிபிள் சீஃப் கமிஷனர், சீஃப் கமிஷனர், பிரின்சிபிள் கமிஷனர், கமிஷனர், அடிஷனல் கமிஷனர், ஜாயின்ட் கமிஷனர், டெப்டி கமிஷனர், அசிஸ்டண்ட கமிஷனர், இன்கம் டேக்ஸ் அலுவலர்கள், இன்ஸ்பெக்டர்ஸ், ஊழியர்கள் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் தனிநபர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிகளைச் சரிபார்த்து அதற்கு ஒப்புதல் அளிப்பவர்களுக்கு அசஸிங்க் ஆபீஸர் என்று பெயர். இவர்கள், இன்கம் டேக்ஸ் ஆபீசர், அசிஸ்டன்ட் கமிஷனர் அல்லது டெப்டி கமிஷனர் இவர்கள் தான் அசஸிங்க் ஆபீஸர்களாக இருப்பார்கள். இந்தியாவில் தாக்கல் செய்யப்படும் அனைத்து வருமான வரி கணக்குகளையும் இந்த மூன்று அலுவலர்கள் தான் மதிப்பீடு செய்கிறார்கள்."

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in