Published : 16 May 2022 05:35 PM
Last Updated : 16 May 2022 05:35 PM

சிமெண்ட் தொழிலில் அதானி குழுமம் விஸ்வரூபம்: 2 நிறுவனங்களை வாங்க ரூ.82 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் 

புதுடெல்லி: சிமெண்ட் உற்பத்தியில் அண்மையில் காலடி எடுத்து வைத்த அதானி நிறுவனம் நாட்டின் இரண்டு முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் 2-வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருபவர் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி. 59 வயதான அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அண்மையில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் அதானி இணைந்தார். இந்நிலையில், தற்போது பெர்க்சயர் ஹாதவே தலைமைச் செயல் அதிகாரி வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பில்லியனர்ஸ் பட்டியலின்படி 123.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார் அதானி. அதன் மூலம் 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ள வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

அதானி தற்போது புதிய தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதானி எண்டர்பிரைசஸின் ஒரு பிரிவான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ், ராகவ் பாஹ்லின் டிஜிட்டல் பிசினஸ் நியூஸ் பிளாட்ஃபார்ம் குயின்டிலியன் பிசினஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் 49 சதவீதப் பங்குகளை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் அதானி குழுமம் அதானி சிமெண்டேசன் லிமிட்டெட் மற்றும் அதானி சிமெண்ட் லிமிட்டெட் என்ற 2 துணை நிறுவனங்களை நிறுவியது. இதில் அதானி சிமிண்டேஷன் நிறுவனம் 2 சிமெண்ட் யூனிட்டுகளை குஜராத் தாஹேஜ் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரைகார்கில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் சிமெண்ட் தொழிலை விரிவுபடுத்தும் முக்கிய திட்டத்தில் அதானி நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை வாங்குகிறது.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஹோல்சிம் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனத்தின் தனது பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேற முடிவு செய்தது.

இந்த பங்குகளை வாங்க ஜின்டால், அல்ட்ராடெக் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் கௌதம் அதானி அந்த பங்குகளை வாங்கியுள்ளார். அதானி குழுமம் ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களை 10.5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 82 ஆயிரம் கோடியாகும்.

இந்த இரு சிமெண்ட் நிறுவனங்களும் வருடத்திற்கு 66 பில்லியன் டன் உற்பத்தி செய்கின்றன. ஏசிசி லிமிட்டெட் மற்றும் அம்புஜா சிமெண்ட் இரண்டையும் இணைத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனமாக அதானி நிறுவனம் உருவெடுக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x