Published : 16 May 2022 04:36 PM
Last Updated : 16 May 2022 04:36 PM

க்யூ காமர்ஸ் போட்டி: மளிகை கடைகளால் சமாளிப்பது சாத்தியமா?

ஆன்லைன் டெலிவரி எல்லாம் பழைய இ-காமர்ஸ் மேட்டர்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லையாம். இது அதன் அடுத்த கட்ட அவதாரமாம். இவ்வகை பத்து, பதினைந்துநிமிட அவசரடி ஆன்லைன் டெலிவரி சமாச்சாரத்தை ‘க்யூ காமர்ஸ்’(Q-Commerce) என்கிறார்கள். அதாவது க்விக் காமர்ஸ். தமிழில் சொன்னால் விரைவு வணிகம். இந்த க்யூ காமர்ஸ் மேட்டர் ஒரு சமீபத்திய ஜனனம். பல புதிய நிறுவனங்கள் குபீரென்று பிறக்க ஏற்கெனவே இருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள் சில குப்பென்று இந்த ஜோதியில் ஐக்கியமாகத் தொடங்கியுள்ளன.

ஆன்லைனில் மளிகை சாமான் வாங்குவோரிடம் செய்யப்பட்ட ஆய்வில் 49% பேர் தங்களுக்கு தேர்வு செய்ய நிறைய பொருள்கள் இருப்பதுதான் முக்கியம் என்று கூற, 37% பேர் தங்களுக்கு விலைதான் பிரதானம் என்றிருக்கிறார்கள். ‘வாம்மா மின்னலு’ என்று வேகமாக தங்களுக்கு பொருட்கள் வேண்டும் என்று கூறியவர்கள் வெறும் 8% பேர் மட்டுமே. பொதுவாகவே நம்மவர்கள் மளிகை பொருட்களை திட்டமிட்டு லிஸ்ட் போட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்கள். அவசரத்திற்கு ஒரு சில பொருட்களை ஆன்லைனில் வாங்குவார்களே ஒழிய மொத்த பொருள்களையும் பத்து நிமிடத்தில் கொண்டு வந்தால்தான் உண்டு என்பார்களா? தெரியவில்லை.

அப்படியே அவசரத்திற்கு ஓரிரு பொருள்கள் வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது அருகில் உள்ள அண்ணாச்சி கடை. வீட்டு கதவை திறந்து கத்தினாலேஅவருக்குக் கேட்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அளவுக்கு கூட நேரம் ஆகாது. அப்படியே இந்த ஓரிரு பொருள்களை மட்டுமே டெலிவரி செய்வதால் க்யூ காமர்ஸ் நிறுவனங்களுக்கு என்ன பெரிய லாபம் வந்துவிடப் போகிறது?

அண்ணாச்சிக் கடைகள் களமிறங்க வேண்டும்: இந்த அதிரடி அர்ஜண்ட் க்யூ காமர்ஸ் நிறுவனங்கள் அண்ணாச்சிக் கடைகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. ஆனால், அண்ணாச்சிக் கடைகளால் க்யூ காமர்ஸ் போட்டியை எளிதாக சமாளிக்க முடியும்.

ஏனென்றால், அவசர அடியாய் டெலிவரி செய்ய அளவெடுத்து செய்ததுபோல் உள்ளவர்கள் தடுக்கி விழுந்தால் இருக்கும் நம் அண்ணாச்சி கடைகள்தான். கஸ்டமர் தேவைகளை அவர்களை விட யாருக்கு தெளிவாய் தெரியும்? அவரைவிட யாரால் கடையிலிருந்து பத்தடி தூரத்தில் உள்ள வீடுகளுக்கு விரைவாய் டெலிவரி செய்ய முடியும்?

அண்ணாச்சி ஸ்டோர்களுக்கும் மளிகை கடைகளுக்கும் முதலில் தேவை ஆன்லைன் நிறுவனங்களை வெல்ல முடியும் என்ற வைராக்கியம். அடுத்து அவர்களுக்குத் தேவை நவீன தொழில்நுட்பம். பொருட்களின் இருப்பை நிர்வகிக்கவும், ஆன்லைன் ஆர்டரை எளிதாக டெலிவரி செய்ய உதவும் பல சாஃப்ட்வேர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவை அதிக விலையும் கிடையாது. இதை வைத்துக்கொண்டு அண்ணாச்சிக் கடைகள் க்விக் காமர்ஸ் நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கலாம். செய்தால் அவர்கள் தொழில் தழைக்கும்.

> இது, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x