

பெல் சார்பு நிறுவனங்களின் அமைப்பான பெல்சியாவுக்கு, துபாய் புதியதாக தொடங்கும் மின் திட்டத்தில் தொழில் வாய்ப்புகளை அளிக்கவுள்ளது என்றார் துபாய் அரசின் மின்வாரியம் மற்றும் தண்ணீர் ஆணைய முதன்மை பொறியாளர் தாவூத்கான் ஜவஹர் அகமது.
திருச்சி பெல்சியாவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாவூத்கான் ஜவஹர் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“துபாய் நாட்டில் இதுவரை 9,646 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் துபாயின் மின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய மின் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக துபாய் அரசு மின் உற்பத்திக்கு தேவையான சாதனங்கள், தொழில்நுட்ப மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து அளிப்பதற்கான ஒப்பந்தங்களை உலக அளவில் சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் கோரிவருகிறது. அந்த வகையில் திருச்சி பெல்சியாவின் சிறு குறு நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை அளிக்க துபாய் அரசு முன்வந்திருக்கிறது.
இது குறித்து ஏற்கெனவே பெல்சியாவுடன் பேசியிருக்கிறோம். துபாய் அரசின் மின் திட்ட பணிகளை எடுத்துச் செய்ய விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேவையான பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் தயாரித்து அளிக்கலாம்.
உற்பத்தி செய்து அளிக்கும் சாதனங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒப்பந்த பணிகளை எடுத்து செய்யும் நிறுவனங்களுக்கு ஆரம்பத்திலேயே அந்தப் பணிக்கான 10 சதவீத தொகையை துபாய் அரசு அளித்துவிடும். இந்த ஒப்பந்தப் பணிகள் மூலம் சிறு குறு நிறுவனங்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். மேலும் இந்த பணிகளுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமானவரி கிடையாது” என்றார் அவர்.
பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கி வந்த பெல்சியாவின் சிறு குறு நிறுவனங்கள் ஒப்பந்தப் பணிகள் இல்லாமல் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் இருந்தன. தேங்கிக் கிடந்த பெல்சியா அமைப்பின் சிறு குறு நிறுவனங்கள் துபாய் அரசின் ஒப்பந்தத்தால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று எழுந்து நிற்கும். இதன் மூலம் திருச்சியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என்று கருதப்படுகிறது.