

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வரையில் ஏற்றுமதிக்கான அனுமதி பெறப்பட்ட ஒப்பந்தங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது மே 13-ம் தேதி வரை ஏற்றுமதி செய்வதற்காக பெறப்பட்ட கோதுமை ஒப்பந்தங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை தேவை என விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளுக்கு அரசு அனுமதிக்கும்பட்சத்தில் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) தெரிவித்துள்ளது. உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் அதே நேரம், அண்டை நாடுகளின் தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளது.
இதனால் உக்ரைனிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவிடமிருந்து கோதுமை வாங்குவதற்கு முன்வந்துள்ளன. இதனால் கடந்த ஏப்ரலில் அதிகபட்ச அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய வர்த்தகக் குழு மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தகக் குழுவை இந்தியா அனுப்பியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2022-23) 1 கோடி டன் அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு நாளில் அரசு தடை விதித்துள்ளது.