சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் அதிரடியாக சரிந்து ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு நேற்று ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10,200 வரை குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக வெளிவரும் செய்திகள், வலிமையடையும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை நவ.9-ம் தேதி முதல் குறைந்து வருகிறது.
கடந்த நவ.17-ம் தேதி 11 மாதங்களுக்குப் பிறகு, பவுன் தங்கம் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
பவுனுக்கு ரூ.1,880 குறைந்து, ரூ.95 ஆயிரத்து 840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.235 குறைந்து, ரூ.11 ஆயிரத்து 980-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 552 ஆக இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10,200 வரை குறைந்துள்ளது.
இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.180 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாகவும் இருந்தது. தங்கம் விலை குறைந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிக்காக தங்க ஆபரணங்கள் வாங்க எண்ணியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.