வங்கிக்கடன் | அடமான பொருள்கள் மீது வங்கி, வாடிக்கையாளர்களுக்கு உள்ள உரிமைகள் என்னென்ன? - ஒரு பார்வை

வங்கிக்கடன் | அடமான பொருள்கள் மீது வங்கி, வாடிக்கையாளர்களுக்கு உள்ள உரிமைகள் என்னென்ன? - ஒரு பார்வை

Published on

வங்கியில் ஒரு பொருளை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போது அந்த பொருளின் மீதான உரிமை, அதிகாரம் வங்கிக்கு மாற்றித் தரப்படுகிறது. அதற்காக வங்கிகளில் பல வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவைகளின் உண்மையான அர்த்தம் புரியாமலேயே வாடிக்கையாளர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது நகையை ஹைபாத்திகேட் செய்து விடுகிறேன், காரை ப்ளெட்ஜ் பண்ணி விடுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

உண்மையில் நகையை ப்ளெட்ஜ் பண்ண வேண்டும், காரை ஹைப்பாத்திகேட் செய்ய வேண்டும், வீட்டை மார்கேஜ் செய்ய வேண்டும். வார்த்தைகளில் என்ன இருக்கிறது, எல்லாமே அடமானத்தைத் தானே குறிக்கிறது என்ற கேள்வி பலருக்குள் வரலாம். எல்லாம் அடமானம் தான் என்றாலும் வங்கிக்கு பொருள் மீது வழங்கப்படும் உரிமைகளில் வேறுபாடு இருக்கிறது என்கின்றனர் நிதியாலோசனை நிபுணர்கள். அதனால் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம், அடிப்படை விபரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அடமானக்கடன் வாங்கும் போது பயன்படுத்தப்படும் வங்கி மொழிகள், அவைகளுக்கான வித்தியாசங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளரும் முன்னாள் வங்கி பொது மேலாளருமான (பஞ்சாப் நேஷனல் வங்கி) "குறள் இனிது" சோம. வீரப்பன்.

வங்கியில் வாடிக்கையளர் ஒருவர் கடன் வாங்கும் போது அதற்கு ஈடாக கொடுக்கும் பொருள்களுக்கு என்ன மாதிரியான செக்யூரிட்டி ஏற்படுத்தலாம் என்பதற்கு இந்தியாவில் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றது. இது சட்டத்திற்கு உட்படது. எதிர்காலத்தில் வாடிக்கையாளர் கடனைக் கட்டத்த தவறும் போது, வங்கி அந்த பணத்தை வசூல் செய்யும் போது இந்த சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாட வேண்டும். வாடிக்கையாளர் வங்கியில் கடன் பெற்று ஒரு பொருளை வாங்குகிறார் என்றால், அந்த பொருளின் மீது வங்கிக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்படும். அதற்கு "பண்டுல் ஆஃப் ரைட்ஸ்" (Bundle of rights) என்று பெயர்.

அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட பொருள் மீது வாடிக்கையாளருக்கும் சில அதிகாரங்கள் உண்டு. வங்கியில் வாங்கும் கடனுக்கு ஒரு பொருளை செக்யூரிட்டியாக கொடுக்கும் போது இரண்டு முக்கியமான அம்சங்களை கவனிக்க வேண்டும். முதலாவது செக்யூரிட்டியாக கொடுக்கும் பொருள் யாரிடம் இருக்கும். இரண்டாவதாக வாடிக்கையாளர் கடனை கட்டத் தவறும் போது, வங்கி நேரடியாக பொருளை விற்று கடனுக்கான பணம் எடுத்துக்கொள்ளலாமா அல்லது நீதிமன்றத்தை நாடி பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதே அது. கடன் மூலம் வாங்கப்படும் பொருள் மீது யாருக்கு என்ன அதிகாரம் என்ற வரையறையே ப்ளெட்ஜ், ஹைபாத்திகேசன், மார்டேஜ்

ப்ளெட்ஜ் (Pledge): ப்ளெட்ஜ் என்பதை தமிழில் அடமானம் என்று சொல்கிறோம். அடமானமாக வைக்கும் பொருளின் உரிமை வங்கிக்கு வழங்கப்பட்டு, பொருளும் வங்கியின் வசம் ஒப்படைக்கப்பட்டால் அது ப்ளெட்ஜ் எனப்படும். உதாரணமாக, தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்கும் போது, அந்த நகை வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் மீதான உரிமை வங்கிக்கு மாற்றப்படுகிறது. மாதாமாதம் சரியாக வட்டியை கட்டி, அசலைத் திருப்பிச் செலுத்தும் போது நகை வாடிக்கையாளரிடம் திருப்பிக் கொடுக்கப்படும். இதில் வங்கிக்கு உள்ள முக்கியமான அதிகாரம் என்னவென்றால், ஒருவேளை கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், வங்கி கடன் தொகையை வசூல் செய்ய நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் இல்லை.

கடன் திருப்பிச் செலுத்தப்படாத சூழலில், வங்கி வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டு பொருளை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதே நடைமுறை எல்லா ப்ளேட்ஜ் பொருள்களுக்கும் பொருந்தும். வியாபாரி ஒருவர் தன்னிடமுள்ள 100 மூட்டை சர்க்கரையை அடமானமாக வைத்து கடன் வாங்குகிறார் என்றால் அந்த சர்க்கரை மூட்டைகள் வங்கியின் வசம் இருக்காது ஆனால் சர்க்கரை மூட்டைகள் மீதான உரிமை வங்கியிடம் இருக்கும் இதனை கன்ஸ்ட்ரெக்டிவ் பொஷசன். அதே நேரத்தில் அடமானப் பொருளை வாங்கும் வங்கி அப்பொருள்களின் மீது தேவையான அளவு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. நகைகள், பங்குகள், நிலையான வைப்புத்தொகைகளை ப்ளெட்ஜ் செய்யலாம்.

ஹைபாத்திகேசன் (Hypothecation): அடுத்த உரிமை மாற்றம் ஹைபாத்திகேசன். இதில் உரிமை எப்படி ஏற்படுத்தப்படுகிறது என்றால், பொருள் வாடிக்கையாளரிடம் இருக்கும், அதற்கான முழு உரிமையும் வங்கியிடம் இருக்கும். உதாரணமாக ஒருவர் வங்கியில் கடன் பெற்று கார் ஒன்றை வாங்குகிறார் என்றால், அந்த கடனைக் கட்டும் வரை கார் வங்கியிடம் இருந்தால் அதனால் வாடிக்கையாளருக்கு எந்த பயனும் இல்லை. அதாவது காரை நாம் ப்ளெட்ஜ் செய்தோம் என்றால் அந்த கடன் கொடுக்கப்பட்டதற்கே பிரயோஜனம் இல்லை. அதனால் கார் வாடிக்கையாளரிடம் இருக்கும், காரின் மீதான உரிமை வங்கிக்கு அளிக்கப்பட்டிருக்கும். வானங்கள், இயந்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் போன்றவை வங்கிக்கடன் மூலம் வாங்கப்படும் போது, அந்த பொருள்கள் வங்கியின் வசம் இருந்தால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை.

அதனால், கடன் காலம் முடியும் வரை அந்த பொருள்கள் மீதான அதிகாரம் மட்டும் ஹைபாத்திகேசன் மூலமாக வங்கிக்கு மாற்றித் தரப்பட்டிருக்கும். ஒருவேளை வாடிக்கையாளர் கடனைக் கட்டத் தவறும் போது ப்ளெட்ஜில் செய்தது போல ஹைபாத்திகேசன் செய்யப்பட்ட பொருளை வங்கி வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி நேரடியாக விற்க முடியாது. கடனைத் திருப்பி வாங்க நீதிமன்றம் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைபாத்திகேசன் செய்யப்பட்ட பொருள் வாடிக்கையாளர் வசம் இருப்பதால் வங்கி அந்த பொருளை குறித்து அடிக்கடி ஆய்வுமேற்கொள்ளும். கார், இயந்திரங்களுக்காக கடன் வாங்கியிருந்தால் 6 மாதங்களுக்கு ஒருமுறை வந்து அந்த பொருள்களை வங்கி ஆய்வு செய்யும். ஹைபாத்திக்கேசனில் உள்ள இன்னொரு விஷயம் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் வரையில் வாடிக்கையாளர் வங்கியின் சார்பில் கடனாக பெற்ற பொருளை வைத்திருக்கிறார். அதனால் அந்த பொருளை விற்கும் போது அந்தப் பணத்தை வங்கியில் கட்டி விட வேண்டும்.

மார்டேஜ் (Mortgage): அடமானத்தின் மூன்றாவது வகை மார்டேஜ். அதாவது கடன் தொகைக்கு இணையான அல்லது அதிகமான அசையா சொத்து ஒன்றை பிணையாக வங்கிக்கு கொடுப்பதே மார்டேஜ் எனப்படும். அதாவது கார், ஸ்கூட்டர், ஏர் கூலர், தங்க நகைகள் போன்ற அசையும் சொத்துக்களை வங்கியில் அடமானமாக வைக்கும் போது அதனை ப்ளெட்ஜ் அல்லது ஹைபாத்திகேட் பண்ணலாம். ஆனால் அசையா சொத்துக்களான வீடு, நிலம், விவசாய நிலங்களை அடமானமாக வைக்கும் போது அதனை ப்ளெட்ஜ், ஹைபாதிகேட் பண்ணமுடியாது. இந்தியாவில் டிரான்ஸ்ஃப்ர் ஆஃப் ப்ராப்பர்டி சட்டம் என்ற ஒன்று இருக்கிறது. அதன் கீழ் மார்டேஜ் செய்ய வேண்டும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மார்டேஜில் பல வகைகள் உள்ளன. வாடிக்கையாளராக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான இரண்டு வகை, ரிஜிஸ்டர் மார்டேஜ், இக்யுடபில் மார்டேஜ். ரிஜிஸ்டர் மார்டேஜில் இடங்களின் மதிப்பிற்கு ஏற்ப ஸ்டாம் டியூட்டி போடுவதால், பெரும்பாலனவர்கள் ரிஜிஸ்டர் மார்டேஜ் செய்வதில்லை.

இக்யுடபில் மார்டேஜில், சில காலங்களுக்கு முன்பு வரை செக்யூரிட்டியாக தரப்போகும் ஒரு இடத்தின் ஒரிஜினல் ஆவணங்களை கடன் கொடுப்பவரிடம் கொடுத்தால் போதும். அதனைப் பதிவு செய்யத் தேவையில்லை. தற்போது பல ஆண்டுகளாக இக்யுடபில் மார்டேஜையும் இணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் வாடிக்கையாளராக நாம் மூன்று முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று டைட்டில் வெரிஃபிகேசன். அடமானமாக வைக்கப்படும் அந்த வாடிக்கையாளருக்கு தான் சொந்தமானதா, அந்த சொத்து அவர்கள் பெயரில் தான் இருக்கிறதா, அவர்களுக்கு முன்பு அந்தச் சொத்து யாரிடம் இருந்தது என்று வங்கி ஆய்வு செய்யும். இதனை வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் செய்வார்.

இரண்டாவது அடமானமாக வைக்கப் போகும் வீடு, இடத்தை வங்கி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். மூன்றாவது மதிப்பீடல். தனது சொத்திற்கு வாடிக்கையாளர் ஒரு மதிப்பு சொல்வார், அதன் சந்தை மதிப்பு ஒன்றாகவும், கைடுலான் மதிப்பு ஒன்றாகவும் இருக்கலாம். அதனால் வங்கியினுடைய அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளரை வைத்து இடத்தின் மதிப்பை மதிப்பீடு செய்வார்கள். இந்த நடைமுறைகள் முடிந்ததும் அந்தச் சொத்தை இக்யுடபில் மார்டேஜ்-க்கு எடுத்துக் கொள்வார்கள். பின்னர் அதனை பதிவாளர் அலுவகத்தில் எம்ஒடி எடுத்து பதிவு செய்வார்கள். அடமானச் சொத்து அசையாச் சொத்தாக இருந்தால் அதனை நாம் மார்டேஜ் செய்ய வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in