பாரம்பரிய விதைத் திருவிழா

பாரம்பரிய விதைத் திருவிழா
Updated on
2 min read

தமிழ்நாடு முழுவதிலும் வைகாசித் திருவிழாக்கள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுப்பதற்கான விதைத் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

நெல் ரகங்களில் மட்டுமே தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய வகைகள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இன்று அந்த நெல் வகைகள் எல்லாம் மறைந்து, வீரிய ஒட்டு ரக விதைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நமது பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற பெயரில் ஒரு பிரச்சார இயக்கம் உருவாகியுள்ளது. கேரளத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தமிழ்நாடு, கர்நாடகம், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா என 5 மாநிலங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் இந்த இயக்கத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 151 பாரம்பரிய நெல் வகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான `நெல்’ ஜெயராமன். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமம் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பதற்கான முக்கிய களமாக உள்ளது. இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அங்கு செயல்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் அங்கு விதைத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மே 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விதைத் திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து 4,226 விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 3,814 பேருக்கு 137 வகையான பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு விதை நெல் வாங்கிச் சென்றவர்கள், அடுத்த ஆண்டு அதைப் போல இரண்டு மடங்கு திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களுக்கு விதை நெல் வழங்கப்பட்டுள்ளது.

ஆதிரெங்கத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள தண்டலம் கிரா மத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி விதைத் திருவிழா நடந்தது. யோக ஷேமா அறக்கட்டளை, தி இந்து நாளிதழ், கிரியேட் மற்றும் டி.ஆர்.டீ.ஈ. அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த திருவிழாவில், 627 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டன. மாப்பிள்ளை சம்பா, ஜீரக சம்பா, தூய மல்லி, ஆர்க்காடு கிச்சிலி சம்பா, அறுபதாம் குறுவை, காட்டு யானம், கவுனி, இலுப்பைப்பூ சம்பா, தேங்காய்ப்பூ சம்பா மற்றும் பெருங்கார் என 10 வகை விதை ரகங்களை விவசாயிகள் பெற்றுச் சென்றனர்.

விதைத் திருவிழாக்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நெல் ஜெயராமன் கூறும்போது, “உணவுக்காக மட்டுமின்றி மருத்துவ நோக்கங்களுக்காகவும் பாரம்பரிய நெல் வகைகள் பயன்படுகின்றன. நெல்லாக மட்டுமில்லாமல் அரிசியாகவோ, அவலாகவோ, பொரியாகவோ மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு பெரும் லாபம் கிடைக்கிறது.

இந்த சூழலில் நிலைத்த மற்றும் நீடித்த வேளாண்மை, நுகர்வோருக்கு நஞ்சில்லா உணவு, உழவர்களுக்கு கடனில்லாத லாபம் தரும் சாகுபடி, நிலம், நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுக்காக நாங்கள் நடத்தி வரும் இந்த இயக்கத்தின் காரணமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரத்து 600 பேர் இயற்கை சாகுபடி முறையில் பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்தனர்” என்றார்.

ஆதிரெங்கம் மற்றும் தண்டலம் கிராமங்களில் நடந்த விதைத் திருவிழாவில் பங்கேற்ற புதுடெல்லியைச் சேர்ந்த சர்வதேச உணவு கொள்கை பகுப்பாய்வாளரான டாக்டர் தேவேந்திர சர்மா கூறும்போது, “இந்த விதைத் திருவிழாக் களின்போது மாப்பிள்ளை சம்பா என்ற பாரம்பரிய நெல் விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதிக வறட்சி, அதிக மழை வெள்ளம் என இரண்டு மாறுபட்ட இயற்கை சூழல்களையும் தாங்கி வளரக் கூடிய பண்பு இந்த நெல் வகைக்கு உள்ளது. உலகிலேயே இத்தகைய சிறப்பு வேறு எந்த நெல் வகைக்கும் இல்லை” என்றார்.

நமது மண்ணுக்கும், உடலுக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்ய விருப்பமுள்ளவர்கள் 94433 20954 என்ற செல்போன் எண்ணில் தன்னை தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதலுடன், தேவையான விதை நெல் தரவும் தயாராக உள்ளதாகக் கூறுகிறார் நெல் ஜெயராமன்.

வி. தேவதாசன்- devadasan.v@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in