

வங்கிகளில் கடன் வாங்கச் செல்லும் போது வாடிக்கையாளர்களிடம் வங்கி அலுவலர்கள் சொல்லும் சில வங்கி மொழிகள் பல புரிவதே இல்லை. வங்கிளில் அவை தினமும் பயன்படுத்தப்படும் மொழிதான் என்றாலும், அதன் நிஜ அர்த்தம் வாடிக்கையாளர்களுக்கு புரியாததால், அவை அவர்களை குழப்பி பயம் கொள்ள செய்து விடுகின்றன. வாடிக்கையாளர்களும் கடன் வாங்கப் போகும் அவசரம் அல்லது அவசியத்தில் அந்த வங்கி மொழிகள் புரியாமலேயே தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படி வங்கிகளில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக மொழிகளைப் பற்றி விளக்கம் தருகிறார் எழுத்தாளர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளர் "குறள் இனிது" சோம.வீரப்பன்.
மார்ஜின்: பொதுவாக வங்கிக்கு சென்று நாம் எந்த கடன் கேட்டாலும், அதில் உங்களுடைய மார்ஜின் எவ்வளவு என்று ஒரு கேள்வி கேட்கப்படும். அது என்ன மார்ஜின் என்று கேட்கிறீர்களா? பொதுவாக வெள்ளைத் தாள் ஒன்றில் ஏதாவது எழுதும் போது இடது மூலையில் கொஞ்சமாக விடப்படும் இடத்திற்கு "மார்ஜின்" என்று சொல்வார்கள். வங்கியில் சொல்லப்படும் மார்ஜினும் கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர் வாங்கும் வங்கிக்கடனில் அவரது பங்குப்பணம் எவ்வளவு என்பதை குறிப்பதே மார்ஜின் எனப்படும். உதாரணமாக ஒருவர் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் கேட்கிறார் என்றால் வங்கி அவருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுக்காது. அதில் கடன் வாங்குபவரின் மார்ஜின் எவ்வளவு என்று கேட்பார்கள் அல்லது 25 சதவீதம் மார்ஜின் வைத்துக்கொள்ளலாம் என்பார்கள். அதாவது ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்க வாடிக்கையாளர் கடன் கேட்கிறார் என்றால் அதில், வங்கி ரூ.7.5 லட்சம் மட்டுமே வழங்கும், ரூ.2.5 லட்சத்தை வாடிக்கையாளரின் பங்காக போடச் சொல்லும். மொத்தக் கடனில் வாடிக்கையாளர் செலுத்தும் பங்குப் பணமே மார்ஜின் எனப்படும்.
மாறும் மார்ஜின்: பொதுவாக வங்கியில் கடன் வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்கள் முதலில் செக்யூரிட்டி எதும் இல்லை என்பார்கள் அல்லது நான் மொத்த கடன் தொகைக்கும் அல்லது அதற்கு மேலும் செக்யூரிட்டி கொடுக்கிறேன் எனக்கு கடன் கொடுங்கள் என்பார்கள். ஆனாலும் வங்கி அந்த வாடிக்கையாளருக்கு கடன் வழங்காது. எந்த வகையான கடனாக இருந்தாலும் அதில் வாடிக்கையாளரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கும். அப்படி மொத்த கடன் தொகையில் வாடிக்கையாளரின் பங்குத் தொகையே மார்ஜின் எனப்படும். இந்த மார்ஜின் தொகை ஒவ்வொரு ஸ்கீமிற்கும் மாறுபடும். கார் கடன் வழங்குகிறார்கள் என்றால் கார் லோன் ஸ்கீம் என்று வைத்திருப்பார்கள், டாக்டர்களுக்கு கடன் தருகிறார்கள் என்றால் டாக்டர் லோன் ஸ்கீம், எம்எஸ்எம்இ கடன் வழங்குகிறார்கள் என்றால் எம்எஸ்எம்இ லோன் ஸ்கீம் என்றும் புதிதாக தொழில் தொடங்கும் பெண் என்றால் அவர்களுக்கு என்று தனி ஸ்கீ்ம் வைத்திருப்பார்கள். இந்த ஒவ்வொரு ஸ்கீமிலும் வங்கிகளின் தலைமை அலுவலகம் பரிந்துரைத்திருக்கும் படி ஒரு குறிப்பிட்டத் தொகையை மார்ஜினாக வைத்திருப்பார்கள். இந்த மார்ஜினும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு இருக்கும்.
மார்ஜினின் தேவை: மார்ஜின் என்பது எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கான முழுத் தொகையையும் கடனாக வங்கி கொடுத்துவிட்டால், அதன் மதிப்பு வாடிக்கையாளர்களுக்கு புரியாமல் போகலாம். தொழிலின் நம்மை தீமைகள் வாடிக்கையாளரை பாதிக்காது. அதனால் எந்த ஒரு தொழிலிலும் உங்களுடைய சொந்த பணம் வேண்டும் என்று வங்கிகள் விரும்புகின்றன. சாதாரணமாக வங்கி வழங்கும் மொத்தக்கடனில் வாடிக்கையாளரின் பங்கு மார்ஜின். வேறு வகையில் கூறினால் மொத்த கடன் தொகையில் வங்கி தரும் தொகை போக மீதி இருக்கும் தொகை மார்ஜின் எனப்படும்.
லிக்விட் கேஷ்: இந்த மார்ஜின் தொகையை வாடிக்கையாளர்கள் பின்வருமாறு செலுத்தலாம். உதாரணமாக வாடிக்கையாளர் ரூ.10 லட்சத்திற்கு ஒரு கார் வாங்க கடன் வாங்க கடன் கேட்கிறார். அதில் வங்கி ரூ.7.5 லட்சம் கடனாக வழங்குகிறது. இப்போது வாடிக்கையாளர் தனது பங்களிப்பு மார்ஜினான ரூ. 2.5 லட்சத்தை மொத்த தொகையாக வழங்கலாம். அதற்கு மாற்றாக வாடிக்கையாளர் ரூ.1 லட்சம் பணம் செலுத்தி விட்டு தொழில் தொடங்குவதற்கு அரசு மானியம் ஏதாவது மானியம் வழங்கி இருந்தால் அந்த மானியத் தொகை மார்ஜினாக கருதப்படும்.
அதே போல உங்கள் பங்குத்தொகையில் 1.5 லட்சத்தை நீங்கள் கையிலிருந்தும் மீதித் தொகையை வங்கியின் சம்மதத்துடன் கடனாக பெற்று செலுத்தலாம் அதுவும் மார்ஜினாக கணக்கில் எடுக்குக் கொள்ளப்படும். வங்கியில் எந்த வகையான கடன் வாங்கச் சென்றாலும் அதற்குண்டான மார்ஜின் தொகை உங்களிடம் இருக்கிறதா என்று வங்கி விசாரிக்கும். அந்த மார்ஜின் தொகையும் முழு ரொக்கமாக இருக்க வேண்டும். அதனால் தான் கடன் வாங்கும் போது வங்கிகள் மார்ஜின் தொகையை வங்கியில் கணக்குதொடங்கி அதில் செலுத்திவிட சொல்வார்கள். அதனால் வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது நாம் என்ன வகையான கடன் வாங்கச் செல்கின்றோம் அதற்கான மார்ஜின் எவ்வளவு என்று தெரிந்து கொண்டு சென்றால், கடன் நடைமுறையின் முதல் படி எளிதாகி விடும்.
ஸ்கீம்: வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது வங்கி மேலாளர் அந்த ஸ்கீம் படி இந்த கடன் கிடைக்காது சார், இந்த ஸ்கீமிற்கு கீழ் இது வராது சார் என்று சொல்வார்கள். அதனால் இந்த ஸ்கீம் என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது. 20 வருடங்களுக்கு முன்பு ஸ்கீம்ஸ் குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்புவார்கள். கிளை மேலாளருக்கு மட்டுமே ஸ்தீம் பற்றித் தெரிந்திருக்கும். இப்போது எல்லாம் வங்கியின் இணையதள பக்கத்திலேயே ஸ்கீம் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி எதற்காகவெல்லாம் கடன் வழங்கலாம், எப்படி வழங்கலாம் அதற்கான கட்டுப்பாடுகள் என்ன என்பதை பொதுவான விதியாக அறிவித்திருக்கிறது. ஆர்பிஐ-ன் அந்த பொதுதகவல்களை கொண்டு வங்கிகள் தங்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்திருக்கின்றன.விவசாயத்திற்கு வழங்கப்படும் கடன்கள் எப்படி வழங்க வேண்டும் என்பது எல்லாம் அக்ரிகல்சர் அட்வான்சஸ் ஸ்கீம்-ன் கீழ்வரும். தனிநபர் கடன்களை பொறுத்த வரையில் ரீடெய்ல் ஸ்கீம்ஸ் என்ற வகையின் கீழ் வழங்கப்படுகின்றன. அதன் கீழ் வீட்டுக்கடன் வாகனக்கடன். தங்க நகைக்கடன், கல்விக்கடன், ஓடி மார்கேஜ் கடன் போன்றவைகளை ரீடெய்ல் ஸ்கீம்ஸ் சொல்கிறார்கள்.
ஒரு ஸ்கீமை பொருத்த வரையில் முதலில் பார்க்க வேண்டியது, கடன் பெறுவதற்கான தகுதி. பொதுவாக மைனர்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்பதால் அவர்களுக்கு கடன் கிடைக்காது. வாடிக்கையாளர் இந்தியராக இருக்க வேண்டும் போன்ற வழக்கமான நிபந்தனைகள் இருக்கும். அடுத்ததாக என்னென்ன காரணங்களுக்காக கடன் வழங்கப்படுகிறன்றன என்று பார்க்க வேண்டும். உதாரணமாக வாடிக்கையாளர் கார் வாங்க கடன் கேட்கிறார் என்றால், காருக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறதா? அல்லது காருக்கான காப்பீடு போன்றவைகளுக்கும் சேர்த்து கடன் வழங்கப்படுமா? போன்ற விபரங்கள் ஸ்கீமில் இருக்கும்.
அடுத்ததாக கடன் தொகைக்கான மார்ஜின் தொகை என்ன, திருப்பி செலுத்தும் காலம் எவ்வளவு, வாங்கும் பொருளுக்ககான ப்ரைமரி செக்யூரிட்டி, கொலாட்ரல் செக்யூரிட்டி என்ன என்பதும் ஸ்கீமில் வரையறுக்கப்பட்டிருக்கும். எந்த பொருள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் கடன் வாங்குகிறார்களோ அது ப்ரைமரி செக்யூரிட்டி. அதற்காக வாடிக்கையாளர் அளிக்கும் அடமான சொத்து கொலாட்ரல் செக்யூரிட்டி எனப்படும். அடுத்ததாக, லோனிங்க் பவர், வங்கியில் எந்த அளவிற்கு கடன் தொகை அனுமதிக்கலாம் என்று வரையறை இருக்கும். இப்போது பல வங்கிகள் ரீட்டெல் கடன்களை நடைமுறைப்படுத்தி, வழங்குவதற்கு தனியாக சிறிய அமைப்பை உருவாக்கியுள்ளன. கடனுக்கான சட்ட திட்டங்களை வரையறுப்பது தான் ஸ்கீம்.
மார்ஜின் மற்றும் ஸ்கீம் பற்றி முன்பே தெரிந்து கொண்டு வங்கிக்குச் சென்றால் கடன் பெறுவது மிகவும் எளிதாகவும் இருக்கும்.