

மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கேம்பல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான ஸ்கூட் நிறுவனத்தின் தலைவர் கேம்பல் வில்சன் (50) தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
விமானத் துறையில் 26 ஆண்டு அனுபவம் பெற்றவர். குறிப்பாக முழுமையான சேவை கொண்ட குறைந்த கட்டண விமான நிறுவனங்களை நிர்வகிப்பதில் கேம்பல் வில்சனுக்கு சிறந்த அனுபவம் உள்ளது.
கேம்பல் நியமனம் குறித்த அறிவிப்பை டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை கேம்பல் ஏற்பதை தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விமான போக்குவரத்துத் துறையில் நீண்ட கால அனுபவம் மிக்கவர் கேம்பல் என்றும், சர்வதேச விமான சந்தை நிலவரம் குறித்த விவரங்களை நன்கறிந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி 27-ம் தேதி டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்கியது.
டாடா குழுமத்தின் அங்கமான ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியாவை உயர்த்தும் பயணத்தில் தனது பங்களிப்பு இருக்கும் என்பது மிகவும் பெருமையளிப்பதாகவும் கேம்பல் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் நிர்வாக பயிற்சியாளராக 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். இந்நிறுவனத்தின் சார்பில் கனடா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்துள்ளார். 2020-ம் ஆண்டு முதல் ஸ்கூட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விற்பனை, சந்தை மற்றும் விநியோகம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். நிறுவனத்தின் சர்வதேச விற்பனை பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளார்.
ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் பல மாற்றங்களை படிப்படியாக டாடா சன்ஸ் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தலைமை வர்த்தக அதிகாரியாக நிபுன் அகர்வாலும், தலைமை மனிதவள அதிகாரியாக தத் திரிபாதியும் நியமிக்கப்பட்டனர்.