

ஒரு காலத்தில் வசதியாக பார்க்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைய வாழ்க்கைச் சூழலில் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன. ஆடம்பரமாக இருந்த பைக், கார் இன்று தேவையாக மாறியிருக்கின்றன. வீடுகளும் அதன் உள்கட்டமைப்புகளும் வெகுவாக மாறியிருக்கின்றன. அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கிக் கடன்கள் மிகவும் கைகொடுத்து உதவுகின்றன. இன்று ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்திர செலவு பட்டியலில் வங்கி இஎம்ஐ -யும் இடம் பெறும் அளவிற்கு வாழ்க்கை நிலை மாறியிருக்கிறது. ஆனாலும் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி என்ற குழப்பம் இன்னுமும் பலருக்கும் இருக்கிறது. வங்கிகள் யாருக்கெல்லாம், என்னென்ன காரணங்களுக்காக கடன் வழங்குகின்றன என்றும் வங்கிக் கடன்களின் வகைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் எழுத்தாளர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் "குறள் இனிது" சோம. வீரப்பன்
டேர்ம் லோன் (Term Loan): குறிப்பிட்ட காலத்திற்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்கும் கடனுக்கு டேர்ம் லோன் என்று பெயர். அதாவது வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன்கள் 10,15, 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. வாகனக்கடனும் 3 முதல் 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படும், தொழில் தொடங்குவதற்கு இயந்திரங்கள் வாங்க வங்கிகள் வழங்கும் கடன் டேர்ம் லோன் எனப்படும். சுருக்கமாக சொல்லவதானால் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு வங்கிகள் வழங்கும் கடன் டேர்ம் லோன் எனப்படும். சாதாரணமாக உங்கள் கணக்கு சரியாக சென்று கொண்டிருந்தால் வங்கி தான் வழங்கிய கடன் தொகையை தவணைகளாக திரும்ப பெற்றுக் கொள்ளும். டேர்ம் லோன் வழங்கப்படும் போதே எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த தவணைகள் உங்களின் பண புழக்கம், எதிர்கால வருமானம், லாபம் ஆகியவைகளை கணக்கிட்டு தவணைத் தொகை தீர்மானிக்கப்படும். டேர்ம் லோனில் ரீ பேமண்ட ஹாலிடே என்ற ஒன்று உண்டு அதாவது வாடிக்கையாளர் கடன் வாங்கிய அடுத்த மாதமே திருப்பிச் செலுத்த வேண்டியது இல்லை. தொழிலுக்காக கடன் வாங்கியிருந்தால் அது லாபம் தரும் வரையிலும், வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கடன் வாங்கி இருந்தால் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு அங்கு குடியேறிய பின்னர் தவணைத் தொகையை கட்ட ஆரம்பிக்கலாம். டேர்ம் லோனைப் பொறுத்த வரையில் உங்களுக்கு லாபம் எப்போது வரத் தொடங்கும், எப்போது உங்களால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியும் என்பதை கணக்கில் கொண்டு முதல் தவணை தீர்மானிக்கப்படும்.
டிமாண்ட் லோன் (Demand Loan): வங்கிகள் கேட்ட உடன் திருப்பி செலுத்தப்பட வேண்டிய கடனை டிமாண்ட் லோன் என்று அழைப்பார்கள். எல்லாக் கடன்களும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியது தான் என்றாலும், இந்த வகைக் கடன்களை வங்கி எப்போது வேண்டுமானாலும் திருப்பி கேட்கலாம் என்பதே இதன் அர்த்தம். இந்த டிமாண்ட் லோன் வாடிக்கையாளர்களின் நிலையான வைப்பு தொகை, அரசு பத்திரங்கள், ஆயுள் காப்பீடு, பங்குகள், நகைகள் ஆகியவை மீது வழங்கப்படுகின்றன. இந்த கடன்களுக்கு வழங்கப்படும் செக்யூரிட்டிகள் வங்கியிடம் ஒப்படைக்கும் படியாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் நகைக்கடன் வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் நகையை வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தும் வரையில் நகை வங்கியிடம் இருக்கும். இந்த வகைக் கடன்களுக்கு வட்டி மாதாமாதம் கணக்கிடப்படும். அதே போல எல்ஐசி மீது நீங்கள் கடன் வாங்கும் போது கட்டிய தொகைக்கு வங்கிக் கடன் வழங்கப்படாது மாறாக சரண்டர் மதிப்பிற்கு தான் கடன் வழங்கப்படும்.
ஓவர் டிராஃப்ட் கடன்கள் (OverDraft Loan): டிமாண்ட் லோனும், ஒவர் டிராஃப்டும் ஒரே மாதிரியான கடன் வகைகள் தான். டிமாண்ட் லோன்கள் எந்த வகையான செக்யூரிட்டிகளின் மேல் கொடுக்கப்படுகிறதோ அதே செக்யூரிட்டிகளின் மேல் தான் ஓவர் டிராஃப்ட் கடன்களும் வழங்கப்படுகின்றன. இதில் நீங்கள் போட்ட பணத்தை விட அதிக பணத்தை வங்கி கடனாகத் தருவதே ஓவர் டிராஃப்ட் எனப்படும். டேர்ம் லோன், டிமாண்ட் வகை கடன்களில் வங்கி தனியாக கணக்குத் தொடங்காது. ஆனால் ஓவர் டிராஃப்ட் கடன் வழங்கப்படும் போது வங்கி கரண்ட் அக்கவுண்ட் என்ற கணக்கைத் தொடங்கி, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்வார்கள். அந்த கணக்கில் இருந்து நீங்கள் எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அந்த தொகைக்கு வட்டி கட்டினால் போது. மொத்த கடன் தொகைக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை. அதே போல கடன் தொகையையும் நமக்கு தேவைப்படும் அளவிற்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். வட்டியை குறைப்பதற்காவும் கடன் தேவை குறிப்பிட்ட இடைவெளியில் மாறுபடும் என்று இருந்தால் நீங்கள் டிமாண்ட் லோனுக்கு பதிலாக ஓவர் டிராஃப்ட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கும் வட்டி மாதாமாதம் கணக்கிடப் படுகிறது. வட்டியை மாதாமாதம் கட்டிவிட வேண்டும். பொதுவாக 11 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
கேஷ் கிரெடிட் லோன் (Cash Credit loan): ஓவர் டிராஃப்ட் கடன் போல கரண்ட் அக்கவுண்ட் மீது வழங்கப்படும் மற்றொரு கடன் கேஷ் கிரெடிட் கடன். வியாபாரத்திற்கு வாங்கும் கடனை தினமும் விற்பனை முடிந்து வங்கியில் கட்ட வேண்டும். அதாவது கேஷை கிரெடிட் செய்ய வேண்டும் அதனால் இந்த பெயர். உதாரணமாக மளிகைக் கடை வைத்திருக்கும் ஒருவர், கடைக்கு அலமாரி வாங்க வேண்டும், கடைக்கு ஏசி போட வேண்டும் போன்ற உள்கட்டமைப்பை மாற்றுவதற்காக வங்கியில் கடன் பெற்றால் அது டேர்ம் லோன். அதே கடையில் உள்ள அரிசி போன்ற விற்பனை பொருள்கள் மீது கடன் வாங்கினால் அது கேஷ் கிரெடிட். ஒவர் டிராஃப்டில் அடமானப்பொருள்கள் வங்கியின் வசம் இருக்கும், கேஷ் கிரெடிட் -ல் பொருள்கள் உங்களிடம் இருக்கும் வங்கி அதன் மீது கடன் வழங்கும். இந்த கேஷ் கிரெடிட் ல் முக்கியமான விஷயம், இந்த வகை கடன்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வகைக்கடனில் பொருள்கள் வாடிக்கையாளர் வசம் இருக்கும் அதன் உரிமையை வாடிக்கையாளர் வங்கிக்கு மாற்றித் தர வேண்டும். இந்த வகைக்கடன் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதன் பின்னர், உங்களின் விற்பனையை பொறுத்து வங்கி தொகையை அப்படியே தொடர்வதா அல்லது உயர்த்தி தருவதா என்று வங்கித் தீர்பமானிக்கும். இதற்கும் மாதாமாதம் வட்டி கணக்கிடப்படும். வட்டியை மாதாமாதம் செலுத்த வேண்டும். பொருள்களின் மீது கடன் வழங்குவது போலவே நிறுவனத்தின் கடன் விற்பனையின் மீதும் கேஷ் கிரெடிட் கடன் வழங்கப்படுகிறது.
கார் லோன் (Car Loan) : கார் லோன் தனிநபராகவோ, மற்றவருடன் இணைந்தோ கடன் வாங்கலாம். இதில் வங்கி கார் வாங்கும் அளவிற்கு திருப்பி செலுத்தும் திறன் இருக்கிறதா என்று வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். காரின் மொத்த விலையில் 85 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்குகின்றன. அதாவது கார் வாங்கும் போது காரின் விலை போக, சாலை வரி, காப்பீடு இவைகளும் வண்டியின் விலையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் காலம் 7 வருடங்கள் வரை வழங்கப்படுகிறது. வட்டி வீதம் 7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இந்த வகைக்கடன்களுக்கு பெரும்பாலும் கேரண்டி கேட்கப்படுவதில்லை. ஆவணங்களாக இருப்பிடச் சான்று, அடையாள சான்று, சம்பளதாரராக இருந்தால் வருமான விபரம், ஃபார்ம் 16, வருமான வரி கட்டியதற்கான சான்று கேட்கப்படும். வாகனக்கடனில் கார் வாங்கும் போது, \ வாடிக்கையாளர் பெயரில் கார் வாங்கப்பட்டாலும், அதனை ஆர்டிஓ அவலுவலகத்தில் பதிவு செய்யும் போது வங்கி அதில் தன் பெயரையும் இணைத்துக் கொள்ளும்.
பைக் லோன் (Bike Loan): மொப்பட், ஸ்கூட்டர், ஸ்கூட்டி, பைக் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. சில வங்கிகள் பெரிய வண்டியாக இருந்தால் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மார்ஜின் என்று பார்த்தால் 10 லிருந்து 25 சதவீதம் வரை இருக்கும். சாதாரணமாக வாகனக்கடன் வாங்கும் வங்கியில் சம்பளக் கணக்கு இருந்தால் மார்ஜின் குறைவாக இருக்கிறது. பொதுவாக ஓட்டுநர் உரிமம் கட்டாயம். கடன் வாங்குபவர்களுக்கு 18 வயதிலிருந்து 70 வயதிற்குள் இருக்க வேண்டும். திருப்பி செலுத்தும் தவணை வண்டியின் பொருளாதார திறனைப் பொறுத்தது. சாதாரணமாக 3 லிருந்து 7 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இதில் இஎம்ஐ தான் முக்கியம். வங்கி வாடிக்கையாளருக்கு நேரடியாக பணத்தை கொடுக்காமல், வாடிக்கையாளரின் மார்ஜின் தொகையை வாங்கிக் கொண்டு, நேரடியாக விற்பனையாளருக்கே பணத்தை செலுத்தி விடுகிறது. வாகனத்தை பதிவு செய்யும் போதும் காப்பீடு எடுக்கும் போதும் வங்கி தன்னுடைய பெயரையும் இணைத்துக் கொள்கிறது. காப்பீடு வாகனத்தின் முழு தொகைக்கும் எடுக்கப்பட வேண்டும்.