Published : 12 May 2022 06:02 AM
Last Updated : 12 May 2022 06:02 AM
சென்னை: தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பாதுகாப்பு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், 2020-ம் ஆண்டுக்கான தொழிலக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், விருது, பரிசுகளை வழங்கி பேசியதாவது:
பொருளாதார வளர்ச்சிக்கு கண்களாக திகழும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தொழிற்சாலைகளில் விபத்து இல்லாமல் பணிபுரிய தேவையான பயிற்சியும், விழிப்புணர்வும், பாதுகாப்புப் பயிற்சியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அபாயகரமான செயல்முறைகளைக் கொண்ட தொழிற்சாலைகளில் பாதுகாப்பு பிரச்சார குழுக்கள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல வசதிகளை பேணிக் காப்பதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு திட்டங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து தொழிலாளர்கள் செயல்பட வேண்டும். அதேபோல், நிர்வாகத்தினரும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.
தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு கிளை தலைவரும், மாநில தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருமான கே.ஜெகதீசன், இணை இயக்குநர் எம்.வி.கார்த்திகேயன், தமிழ்நாடு கிளையின் செயலாளர் பழனிவேலு ராஜ்மோகன், விருது குழு உறுப் பினர் கே.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினர்.
முன்னதாக, தமிழ்நாடு கிளை துணை தலைவர் டி.பாஸ்கரன் வரவேற்றார். நிறைவாக, பொருளாளர் கே.ஜெகநாதன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT