

சென்னை: ரெப்கோ வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ரெப்கோ வங்கி மற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் சார்பில், ரெப்கோ சுபிக் ஷம் என்ற மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு வைப்புத் திட்டம், தாயகம் திரும்பியோர் குடும்பத்திலுள்ள இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கான ரெப்கோ மகிளா சம்ரித்தி திட்டம் மற்றும் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா இந்த புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் ஒப்புதல் ஆணையையும் வழங்கி பேசும்போது, “ரெப்கோ வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் (லைசென்ஸ்) வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்து உரிமம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.
வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லா பேசும்போது, “கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ரெப்கோ வங்கி. தென்மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் 108 கிளைகள் உள்ளன. வங்கியின் மொத்த வணிகம் ரூ.16,500 கோடியாகும். 12 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக லாபம் ஈட்டி வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்திலும், பங்குதாரர்களுக்கு 20 சதவீத டிவிடென்ட் வழங்கப்பட்டது” என்றார்.
நிகழ்ச்சியில் வங்கியின் தலைவர் சந்தானம், இயக்குநர் தங்கராஜு, தலைமைப் பொது மேலாளர் யோக சேரன், பொது மேலாளர் வெங்கடாசலம், கூடுதல் பொது மேலாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.