Published : 11 May 2022 04:39 AM
Last Updated : 11 May 2022 04:39 AM

மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு உதவத் தயார் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகம், ஐக்கிய அரபு அமீரகத்துடனான பொருளாதார ஒப்பந்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடை பெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை இணையமைச்சர்கள் அனுபிரியா பட்டேல், எல்.முருகன், தமிழக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு மிகவும் அவசியம். மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் சார்பில், ஆஸ்திரேலியாவுடன் செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செய்யப்பட்ட பொருளாதார ஒப்பந்தம் குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

மத்திய வர்த்தகத் துறை இணை செயலாளர் டாக்டர் எம்.பாலாஜி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்றுமதியாளர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சிக்கல்கள், தடங்கல்கள் குறித்து எங்களுக்குத் தெரிய வரும். அதன்மூலம், அதை சரி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும்.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவர்கள் 75 பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்ய உறுதி அளித்தனர்.

அதன்படி, அங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்கினால், அந்த முதலீடு முழுவதும் நமது நாட்டுக்கு கிடைக்கும். தொழில்துறை பெருகுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். உட்கட்டமைப்புக்காக, ரூ.7.5 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதில், மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக 50 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு மிகவும் அவசியம். மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இதனை மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், சூரிய மின்சக்தி உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தடையில்லா மின்சாரத்தை, குறைந்த விலையில் 24 மணி நேரமும், விநியோகம் செய்ய வேண்டும். இது தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறு, குறு மற்றும் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது,

‘‘இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் செய்துள்ள ஒப்பந்தம் மூலம் ஏற்றுமதி பொருட்களில் 90 சதவீத பொருட்களுக்கு உடனடியாக வரி விலக்கு தரப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒப்பந்தம் மூலம், ஏற்றுமதியாகும் 98 சதவீத பொருட்களுக்கு ஜீரோ சதவீத வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.

கரோனா தொற்றுக்குப் பிறகு 2021-22-ம் ஆண்டில் தமிழகத்திலிருந்து ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பு பொருட்கள் அரபு நாட்டுக்கும், ரூ.2,700 கோடி மதிப்பிலான பொருட்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்றுமதியாகியுள்ளன.

திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்றுமதி மையங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தின் ஏற்றுமதியை வரும் 2030-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர்கள் அனுபிரியா பட்டேல், எல்.முருகன், வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் சந்தோஷ்குமார் சாரங்கி உள்ளிட்டோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x