நகைக்கடன் | வட்டி விகிதம் முதல் நடைமுறைகள் வரை - ஓர் அடிப்படை விளக்கம்

நகைக்கடன் | வட்டி விகிதம் முதல் நடைமுறைகள் வரை - ஓர் அடிப்படை விளக்கம்
Updated on
3 min read

தங்கம்... இந்த வார்த்தையே கொஞ்சம் உயர்வானதுதான் என்றால் அது மிகையில்லை. ஒரு நாட்டின் பணமதிப்பிலும் தங்கம் பங்கு வகிக்கிறது. அந்தளவுக்கு தங்கம் ஒரு சிறப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. ராஜாங்க விவகாரத்தில் மட்டும் இல்லாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. விலை நிரந்தரமில்லாத தங்ககத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பில்லை என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தினாலும், இந்திய சமூகத்தில் தங்கத்தின் மீதான வாஞ்சை குறையவே இல்லை. அட்சய திருதியை காலத்தில் அதிகரித்து வரும் தங்கத்தின் விற்பனையே இதற்கு சாட்சி.

மத்திய, கீழ்மத்திய வர்க்க குடும்பங்களின் எதிர்பாராத திடீர் செலவுகளை சமாளிக்க அவர்களிடம் இருக்கும் தங்கம்தான் ஆபத்துதவியாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அதற்கு சாட்சி தொலைக்காட்சி, பத்திரிகைகளில் நகைகளை அடமானம் வைப்பதற்கும், விற்பனைக்கு செய்யப்படும் விளம்பரங்கள். தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் போல வங்கிகளும் நகைக்கடன் வழங்குகின்றன.

வங்கிகள் எதற்கெல்லாம் நகைக்கடன் வழங்குகின்றன, அதற்கான வட்டி விகிதங்கள் என்ன என்று விளக்கமளிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம. வீரப்பன்...

வங்கிகளும் நகைக்கடனும்: "தமிழகத்தில் தங்க நகைகள் மீது கடன் கொடுப்பது மிகப் பெரிய வியாபாரம். பிற நிதி நிறுவனங்களைப் போல வங்கிகளும் தங்க நகைகள் மீது கடன்கள் வழங்குகின்றன. நகைக் கடன்கள் என்று வரும்போது வங்கிகள் கடன் வழங்குவதற்கு வங்கிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, நிறையக் கேள்விகள் கேட்கின்றன என்று பொதுமக்கள் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும் குறைவான வட்டியில் கடன் வழங்குவதால், தங்க நகைக் கடன் விஷயத்தில் வங்கிகள் முக்கியமான ஆதாரமாக விளங்குகின்றன.

நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்துமே நகைக்கடன் வழங்குகின்றன. விவசாயத்திற்கும், தனிநபர் செலவினங்களுக்கும் நகைக்கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் விவசாயத்திற்காக, விவசாய காரணங்களுக்காக நகைக்கடன் வாங்குவது என்பது கொஞ்சம் வேறுபட்டது. விவசாயக் கடன்களுக்கான வட்டி குறைவு, திருப்பிச் செலுத்தும் காலம் எல்லாம் தனி. இந்தக் கட்டுரை தனிநபர் தங்க நகைக்கடன் பற்றியே விளக்குகிறது.

தனிநபர் நகைக்கடன்களும் தகுதிகளும்: குறிப்பிட்ட செலவினங்களுக்காக தனிநபர்களுக்கு வங்கிகள் நகைக்கடன் வழங்குகின்றன. தனிநபர்கள் அனைவரும் வங்கிகள் வழங்கும் நகைக்கடன் பெறத் தகுதியானவர்கள். அடகு கடை வைத்திருப்பவர்கள், நகைக்கடை வைத்திருப்பவர்கள் தனிநபர் நகைக்கடன் பெற முடியாது. வங்கிகள் எதிர்பாராத செலவினங்கள், மருத்துவச் செலவினங்கள் போன்றவைகளுக்காக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் தனிநபர் நகைக்கடன்கள் வழங்குகின்றன. குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வங்கிகள் கடன் வழங்குகின்றன.

நகை மதிப்பிடப்படும் முறை: வங்கிகள் நகைக்கடன் வழங்கும் நகைகளை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பது முக்கியமானது. நகைகளிலும் வைர நகைகளை மதிப்பிடுவது சிரமம் என்பதால், தங்கத்தின் மீது மட்டுமே நகைக்கடன் வழங்கப்படுகிறது. அடமானமாக வைக்கப்படும் தங்கத்தை அப்ரைசர் எனப்படும் நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்வார். இதற்காக தகுதியான, அனுபவமுள்ள வங்கிகளால் அங்கீகரக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர்கள் வங்கிகளில் இருப்பார்கள். இந்த அப்ரைசர்கள், நீங்கள் கொடுக்கும் 22 காரெட் தங்க நகைகளை மதிப்பீடு செய்து சொல்லும் தொகையில் 75 சதவீதம் வாடிக்கையாளருக்கு கடனாக வழங்கப்படும்.

உதாரணமாக, வாடிக்கையாளர் ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு செய்கூலி சேதாரம் போக வாங்கிய நகையை, அப்ரைசர் அடகு வைக்கப் போகும்போது அன்றைய தங்கத்தின் விலையின்படி, 60 ஆயிரம் என மதிப்பீடு செய்கிறார் என்றால், அதில் 75 சதவீதமான 45 ஆயிரம் ரூபாயை வங்கி நகைக் கடனாக வழங்கும். அதே ரூ.50 ஆயிரத்திற்கு வாங்கிய நகையை, அடகுவைக்கும் நாளன்று அன்றைய விலைப்படி, ரூ 40 ஆயிரம் என மதிப்பீடு செய்கிறார் என்றால் வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும். வங்கிகள் நகைகளுக்கு மட்டும் இல்லாமல், வங்கிகள் விற்பனை செய்த தங்கக் காசுகள் மீதும் கடன்கள் வழங்குகின்றன.

வங்கி வட்டியும் திருப்பி செலுத்துதலும்: வங்கிகள் சாதாரணமாக நகைக்கடன்களை டிமாண்ட் லோனாகத்தான் கொடுக்கும். டிமாண்ட் லோன் என்றால் ஒரு வருடத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். நகைக்கடனுக்கான வட்டி மாதாமாதம் கணக்கிடப்படும். நகைக்கடன்களுக்கான வட்டி சுமார் 8 - 8.5 சதவீதம் வரையில் இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும்போது, மாதா மாதமோ, 10 நாட்களுக்கு ஒருமுறையோ, பணம் இருக்கும் போதோ என வாடிக்கையாளர்கள் வசதிக்கு ஏற்ப திருப்பிச் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டும். ஒரு வருடத்தின் முடிவில் மொத்தமாக பணத்தைக் கட்டும் முறைக்கு புல்லட் ரீ பேமண்ட் என்று பெயர்.

வங்கியில் கடன் வாங்குவதில் உள்ள ஒரு நல்ல விசயம் வாடிக்கையாளர் பணம் திருப்பிச் செலுத்தும்போது என்ன தொகை இருக்கிறதோ அதற்கு தான் வட்டி கணக்கிடப்படும். அதாவது வாடிக்கையாளர் தன் வசதிக்கெற்ப ரூ.10 ஆயிரம், ரூ.2,500 என தனது வசதிக்கேற்ப பணம் திருப்பிச் செலுத்தி இருந்தாரென்றால், வட்டி கணக்கிடப்படும் மாதத்தில் எவ்வளவு தொகை இருக்கிறதோ அதற்கு தான் வட்டி கணக்கிடப்படும். இதனால் வட்டி குறைவாகவே இருக்கும். வங்கிகள் இந்த வகை கடனுக்கும் ப்ராசஸிங்க் சார்ஜ் எனப்படும் நடைமுறை கட்டணமாக 0.5 சதவீதம் வசூலிக்கின்றன. சில வங்கிகளில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

ஓவர் டிராஃப்ட் வசதி: நகைக்கடனை ஓவர் டிராஃப்ட் ஆகவும் வாடிக்கையாளர் வாங்கிக் கொள்ள முடியும். அதாவது, கடனுக்கு அடமானமாக வங்கிக்கு அவர் கொடுக்கும் நகையை மதிப்பிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கடனாக ஒதுக்கீடு செய்யும். பின்னர் கடன் தொகைக்கு பதிலாக வாடிக்கையாளருக்கு காசோலைகள் வழங்கப்படும். அவருக்கு பணம் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அவர் காசோலையை மாற்றிக்கொள்ளலாம். இல்லை என்றால் பணத்தைத் திருப்பி செலுத்தி விடலாம். நகைக்கடனில் வங்கிகளுக்கான செக்யூரிட்டி வாடிக்கையாளர் தரும் தங்க நகையே. நகையை வாங்கி சீல் வைத்து வங்கி தன்னிடம் வைத்துக் கொள்ளும். வட்டியுடன் அவர் கடனை திருப்பிச் செலுத்திய பின்னர் நகை உரியவரிடம் வழங்கப்படும்.

ஒரு வருட காலத்திற்குள் வாடிக்கையாளர் வட்டியையோ அசலையோ திருப்பிச் செலுத்தி நகையை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் வங்கி நடவடிக்கையில் இறங்கும். நகைக்கடன் ப்ளேட்ஜ் (அடமானம்) என்பதால், வங்கி வாடிக்கையாளருக்கு நகைக்கடனுக்கு வட்டியோ அசலோ கட்டவில்லை. உடனடியாக வட்டியுடன் அசல் தொகையை கட்டி நகையை திருப்பிக் கொள்ளுமாறு நோட்டீஸ் அனுப்பும். அதற்கு பதில் இல்லை என்றால் இரண்டாவது நோட்டீஸ் அனுப்பும். அதற்கும் பதில் இல்லை என்றால், மூன்றாவதாக ஆக்ஸன் நோட்டீஸ் கொடுப்பார்கள். நகைக் கடன் ப்ளேட்ஜ் என்பதால் நோட்டீஸ் கொடுத்து விட்டு நகையை விற்று வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சட்டம் பரிந்துரைக்கிறது.

ஆனால், நகையை விற்பது வங்கிக்கு நஷ்டம் என்பதால் வங்கி உடனடியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபடாது. மீண்டும் வாடிக்கையாளர்களிடம் பெரும்பாலும் ஏலம் போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.

தனிநபர் கடனுக்காக மட்டும் இல்லாமல் தொழிலுக்காகவும் நகைக்கடன் வாங்க முடியும். எதற்காக கடன் வாங்கியிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் வட்டியையும் அசலையும் திருப்பிச் செலுத்தி நகைகளை மீட்டு விடுங்கள். ஏனெனில், இந்திய சமூகத்தில் நகைகள் வெறும் தங்கம் மட்டும் இல்லையே. அதன் மீது அதிகமான உணர்வு மதிப்புகளும் இணைந்தே இருக்கின்றன.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in