

எதிர்கால தேவைக்காக நிகழ் காலத்தில் சேமிப்பது என்பது எல்லா தரப்பு மக்களின் விருப்பமாக இருக்கிறது. வேகமான இளைய தலைமுறை பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய அதிக விருப்பம் காட்டி வருகின்றனர். அவை எந்த அளவுக்கு அதிக லாபம் ஈட்டுகின்றனவோ, அதே அளவுக்கு சந்தை அபாயங்களையும் கொண்டிருக்கின்றன.
இந்தச் சந்தை அபாயத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் எப்போதும் பாதுகாப்பான முதலீடுகளையே விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது வங்கிகள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள். மாறாக, வங்கிச் சேவைகளை வழங்கி வரும் அஞ்சலகங்களும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அப்படி அஞ்சலகங்களில் உள்ள எந்தெந்தத் திட்டங்கள் சேமிக்கச் சிறந்த திட்டங்கள் என்று விளக்கமளிக்கிறார்கள் நிதி ஆலோசனை நிபுணர்கள்.
சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம்: நீண்டகால பாதுகாப்பான சேமிப்புகளுக்கு அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மிகச் சிறந்த ஒன்று என பரிந்துரைக்கின்றனர் நிதி ஆலோசகர்கள். வங்கிகளைப் போல அஞ்சலகங்களிலும் வாடிக்கையாளர்களால் ரெக்கரிங்க் டெபாசிட் எனப்படும் ஆர்டி திட்டத்தில் பணம் போடலாம் என்கிறார் பிரபல நிதி ஆலோசகர் சோம. வள்ளியப்பன்.
மேலும் அவர், "60 வயதிற்கு மேல் இருப்பவர்கள், 50 வயதிற்கு மேல் இருந்து பணி ஓய்வு பெற்று அதற்கான பணப்பலன்களை பெற்றவர்கள் சீனியர் சிட்டிசன் சேவிங்க் ஸ்கீமில் ரூ.15 லட்சம் வரை பணம் போடலாம். மற்ற வட்டிகளை விட இந்த திட்டத்திற்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு இதில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரியில் ரூ.10 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.50 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.
செல்வமகள் திட்டம்: பெண்குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம் செல்வ மகள் சேமிப்புத் திட்டம். 10 வயதிற்கும் குறைவாக உள்ள அனைத்து பெண்குழந்தைகளும் இந்த சேமிப்புத் திட்டத்தில் சேரலாம். குழந்தைக்கு 15 வயது ஆகும் வரை திட்டத்தில் பணம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு.
குழந்தையின் 15 வயதிலோ அல்லது 10-ம் வகுப்பு படிக்கும் போதே தேவைப்பட்டால் சேமிப்பிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ள முடியும். குழந்தைக்கு 21 வயதாகும்போது திட்டம் முதிர்வடையும். அந்த முதிர்வு தொகைக்கு வருமான வரி கிடையாது. இருக்கிற சேமிப்புத் திட்டங்களிலேயே செல்வ மகள் திட்டத்திற்கு தான் அதிக வட்டி வழங்கப்படுகிறது.
செல்வ மகள் திட்டத்தைப் போலவே தமிழகத்தில் ஆண் குழந்தைகளுக்கு செல்வ மகன் திட்டம் என ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. விசாரித்துப் பார்த்ததில் அப்படி ஒரு திட்டம் இல்லை. பிபிஎஃப் திட்டத்தை அந்தப் பெயரில் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல, குறிப்பிட்ட வேலை செய்கிறவர்களுக்கு போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதில் தவணைத் தொகை குறைவு. முதிர்வு காலத்தில் அதிக தொகை திரும்பக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது" என்கிறார்.
பிபிஎஃப் அல்லது பொது சேமநல நிதி: அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை வட்டி தரப்படுகிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கு பிரதமரின் வய வந்தனா யோஜனா திட்டம் மிகச் சிறந்தது என்கிறார் நிதி ஆலோசகர் நாக. வள்ளியப்பன்.
வருமான வரி விலக்கிற்காக மட்டும் இல்லை ஒவ்வொரு தனிநபருக்கும் பிபிஎஃப் எனப்படும் பொது சேமநல நிதி திட்டத்தில் இணைய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். மேலும் அவர், "இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வருமான வரி விலக்கு பெற முடியும். இது ஒரு ட்ரிபுள் E திட்டமாகும். அதாவது, Exempt, Exempt, Exempt என்பதே ட்ரிபுள் E. பிபிஎஃப் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்யும் ரூ.1.5 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. இதற்கு 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது. வட்டியால் வரும் வருமானத்திற்கும் வரி விலக்கு உண்டு. 15 ஆண்டுகளில் பணம் முதிர்வை அடையும். அப்போது பெறப்படும் முதிர்வு தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு.
இப்படி முதலீடு,வருமானம், திரும்ப எடுத்தல் ஆகிய மூன்று சூழல்களிலும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அஞ்சலகத்தில் உள்ள சிறந்த திட்டங்களில் இதுவும் ஒன்று. 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், குறிப்பாக தொழில் முனைவோருக்கு இது நல்லதொரு திட்டம்" என்றார்.