

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் 130 டாலர் வரையில் உயர்ந்தது. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தொடர்ந்து உயருகிறது. போர் சூழல் காரணமாக சப்ளை சங்கிலியில் தொடர்பு அறுபட்டு வர்த்தக பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக வர்த்தகத்தை தடை செய்துள்ளன. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் பணவீக்கம்
பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. சீனாவில் நிலவி வரும் கரோனா பரவல் சூழல் காரணமாக அங்கு ஜீரோ கோவிட் கொள்கையானது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு சீனாவின் பொரூளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 77 ஆக சரிவடைந்தது.
இந்தநிலையில் இன்று காலை 9.10 மணியளவில் ரூபாயின் மதிப்பானது 77.28 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் 0.48% வீழ்ச்சியினை கண்டுள்ளது. கடந்த அமர்வில் ரூபாயின் மதிப்பானது 76.93 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
ரூபாயின் மதிப்பானது இன்று காலை தொடக்கம் முதலே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதிகபட்சமாக 77.42 ரூபாய் வரையில் சரிவினைக் கண்டது. கடந்த மே 7, 2022 அன்று அதிகபட்சமாக 76.98 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், இன்று 77 ரூபாயினையும் தாண்டி வீழ்ச்சி கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.