Published : 07 May 2022 07:30 AM
Last Updated : 07 May 2022 07:30 AM

வேகமாக வளரும் நாடுகளில் ஒன்று இந்தியா: 2022-ல் பொருளாதாரம் 8.5% வளர்ச்சி காணும் என ஐஎம்எஃப் தகவல்

புதுடெல்லி: 2022-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.5 சதவீதம் அளவில் வளர்ச்சி காணும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) நம்பிக்கை தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்ற அடையாளத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்கிறது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

உலகப் பொருளாதார நிலவரம் தொடர்பான அறிக்கையை ஐஎம்எஃப் வெளியிட்டுள்ளது. அதில் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் உலக நாடுகளின் வளர்ச்சி நிலவரம் குறித்த கணிப்புகளைத் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022-ம் ஆண்டு 8.5 சதவீதமாகவும் இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

ஐஎம்எஃப் கணிப்பின்படி சீனாவின் வளர்ச்சி 2021-ல் 8.0 சதவீதமாகவும் 2022-ல் 5.6 சதவீதமாகவும் இருக்கும். அதேபோல் அமெரிக்காவின் வளர்ச்சி 2021-ல் 6.0 சதவீதமாகவும், 2022-ல் 5.2 சதவீதமாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. முன்பு வெளியிட்ட அறிக்கையில் 2021-ல் அமெரிக்காவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது அது 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி 2021-ல் 5.9 சதவீதமாகவும் 2022-ல் 4.9 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

இந்தியா மீண்டு வந்தது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறுகையில், ‘இந்தியா 2020-ம் ஆண்டு கரோனா முதல் அலையின்போது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. நாடு தழுவிய ஊரடங்கு கொண்டு வரப்பட்டதால், தொழிற் செயல்பாடுகள் முடங்கின. அதையெடுத்து வந்த இரண்டாம் அலை இந்தியாவின் பொருளாதார மீட்சியை பாதித்தது. எனினும், இந்தியா இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டு வந்துள்ளது. கரோனா தடுப்பூசி பரவலாக கொண்டு செல்வதிலும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதார நிலவரம் குறித்து அவர் கூறுகையில், ‘குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் இன்னும் கரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலையில் இருக்கிறது. விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x