Published : 07 May 2022 07:35 AM
Last Updated : 07 May 2022 07:35 AM
சென்னை: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சுதர்சன் வேணு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் முதல் முறையாக ரூ. 20 ஆயிரம் கோடி வருமானத்தை எட்டியுள்ளது.
இந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடி வருமானத்தை எட்டுவதற்கு 30 ஆண்டுகள் பிடித்தது. ஆனால் அடுத்த ரூ.10 ஆயிரம் கோடியைத் தொட 6 ஆண்டுகள் போதுமானதாயிருந்தது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக நிறுவனத்தில் இணைந்த சுதர்சன் வேணு, 2013-ம்ஆண்டில் இயக்குநர் குழுவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர் குழு இவரது இணை நிர்வாக இயக்குநர் பதவியை 2014-ம் ஆண்டு அங்கீகரித்தது.
இவர் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் மிகப் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் கரோனா பாதிப்பு இருந்தபோதிலும் விரிவாக்கம் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதில் இவர் மிகவும் தீவிரம் காட்டி அதில் வெற்றியும் பெற்றார். இதன் பயனாக 2022-ம் நிதி ஆண்டில் 10 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி என்ற நிலையை எட்டியது.
சர்வதேச அளவில் பிரபலமாக திகழ்வதற்காக பிரபல நிறுவனங்களையும் கையகப்படுத்தியது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டனின் பிரபலமான நார்டன் மோட்டார் சைக்கிள் பிராண்டை இந்நிறுவனம் கையகப்படுத்தியது. அடுத்து பேட்டரி வாகனங்கள் பக்கம் அனைத்து நிறுவனங்களும் நகர்ந்துவரும் நிலையில், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எகோ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. சமீபத்தில் பிரிட்டனின் எப்கோ லிமிடெட் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை இந்நிறுவனம் வாங்கியது. இந்நிறுவனமும் இ-பைக் தயாரிப்பில் முன்னணியில் திகழ்கிறது. பேட்டரி வாகன உற்பத்தியில் அதிக முதலீடு மேற்கொள்வது ஆகியவற்றில் சுதர்சனின் பங்கு மிகவும் அதிகமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT