Published : 06 May 2022 05:55 AM
Last Updated : 06 May 2022 05:55 AM
கோவை: கடந்த நிதி ஆண்டில் அக்டோபர் வரை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கயிறு, கயிறு பொருட்கள் ஏற்றுமதி 13.6 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை, கயிறு வாரியத்துடன் இணைந்து தேசிய கயிறு வாரிய மாநாட்டை கோவையில் நேற்று நடத்தியது. இதில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
ஏற்றுமதி சார்ந்த துறையாக கயிறு தொழில் உள்ளது. இந்திய கயிறு துறையானது இதுவரை இல்லாத வகையில் கடந்த 2020 -21-ம் ஆண்டில் 3778.98 கோடி மதிப்புள்ள 11.63 லட்சம் மெட்ரிக் டன் கயிறு, கயிறு பொருட்களை 106 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும், 2021-22-ல் கடந்த அக்டோபர் வரை மட்டும் 2558.57 கோடி மதிப்புள்ள 7.28 லட்சம் மெட்ரிக் டன் கயிறு, கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, அளவின் அடிப்படையில் 13.60 சதவீதமும், விலை மதிப்பின் அடிப்படையில் 30.30 சதவீதமும் அதிகம் ஆகும். இருப்பினும், உலகமயமாதல், பல்வேறு நாடுகளின் போட்டி காரணமாக இந்த துறைக்கான வாய்ப்புகளும், சவால்களும் அதிகரித்து உள்ளன.
குறிப்பாக இந்திய கயிறு பொருட்களுக்கு போட்டியாக சர்வதேச சந்தையில், குறைந்த விலைகொண்ட சீன கயிறு பொருட்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைவர வாய்ப்புள்ளது. கயிறு துறை உள்ளிட்ட பாரம்பரிய தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய அரசு உணர்ந்துள்ளது. அனைவரின் கூட்டு முயற்சியால் வெளிநாட்டு ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனையை ஊக்குவிப்பது, சந்தைப்படுத்துதலை பரவலாக்குவதன் மூலம் இந்திய கயிறு துறையை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி மதிப்பு கொண்ட துறையாக மாற்றலாம்.
கேரளாவில் 800 கயிறு தொழிற்கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல, தென்னை பயிராகும் அனைத்து மாநிலங்களும் கயிறு தொழிற் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தினால், இடைத்தரகர்களின் சுரண்டலை தவிர்த்து, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். மேலும், கேரளாவில் கயிறுக்கென தனி பிரிவை அந்த மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தமிழக அரசும் தனிப்பிரிவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, மற்ற மாநிலங்களும் கயிறு தொழிலை மேம்படுத்த தனிபிரிவை உருவாக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்வில், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங், தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், கயிறு வாரியத் தலைவர் டி.குப்புராமு கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT