

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மயங்க் அஷார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி முதல் தனது பொறுப்புகளில் இருந்து விலகுகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சுதிர் மாத்தூர் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கெய்ர்ன் நிறுவனத்தை வேதாந்த குழுமம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கியது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்நிறுவனத்துக்கு மூன்று தலைமைச் செயல் அதிகாரிகள் மாறியுள்ளனர்.
அஷாரின் இரண்டு வருட பதவி காலம் இந்த வருட இறுதி யில் முடிவடைகிறது. ஆனால் முன்னதாகவே வெளியேறிவிட்டார். கெய்ர்ன் இந்தியா பங்குகள் கடுமையாக சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு வருடங்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பாதியாக சரிந்தது.
இதன் காரணமாக பிஎஸ்இயின் முக்கிய குறியீடுகளில் இருந்து இந்நிறுவன பங்கு நீக்கப் பட்டுள்ளது.