Published : 30 Apr 2022 06:51 PM
Last Updated : 30 Apr 2022 06:51 PM

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

2014-ம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய பிரபல மொபைல் நிறுவனமான ஸியோமி நிறுவனம் 2015-ம் ஆண்டிலிருந்து லாபத் தொகையை சீனாவைச் சேர்ந்த தனது தாய் நிறுவனத்தக்கு பணத்தை அனுப்பத் தொடங்கியது. இதில் ஸியோமி துணை நிறுவனமான ஸியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.

இந்தநிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அந்நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் விதிகளின் கீழ் ஸியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சீனாவைச் சேர்ந்த சியோமி குழுமத்தின் உறுப்பு நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனம், இந்தியாவின் அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் , 1999க்கு புறம்பாக நிதி பரிவர்த்தனை மேற்கொண்டுள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்தியாவில் கிடைத்த வருவாயை ராயல்டி என்ற பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்பியது முறைகேடானது.

சியோமி நிறுவனம் இந்த மோசடி தொகையை இரு போலி நிறுவனங்களை உருவாக்கி அதில் ரெமிட்டன்ஸ் தொகையாக செலுத்தி தனக்கே அதை பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் வங்கிகளுக்கும் தவறான தகவலை சியோமி நிறுவனம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x