

நியூ மெக்சிகோ: அமேசான் நிறுவன பங்குகள் சரிவு கண்ட காரணத்தால் ஒரே நாளில் சுமார் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார் ஜெஃப் பெசோஸ்.
உலக அளவில் இ-காமர்ஸ் மாற்று கிளவுட் கம்யூட்டிங் என தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். இந்நிறுவனத்தை நிறுவியவர் ஜெஃப் பெசோஸ். தற்போது அதன் நிர்வாக தலைவராக இயங்கி வருகிறார் அவர். அமேசான் நிறுவனத்தில் 9.8 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் பெசோஸ். உலக பணக்காரர்களில் எலான் மஸ்கிற்கு அடுத்த இடத்தில் உள்ளார் அவர்.
இந்நிலையில், அமேசான் நிறுவன பங்குகள் வீழ்ச்சி கண்ட காரணத்தால் அவரது சொத்து மதிப்பில் ஒரே நாளில் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார் பெசோஸ். இந்த ஆண்டு தொடங்கி இது நாள் வரையில் சுமார் 43.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார் அவர். இது ப்ளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் கொடுத்துள்ள உலக பணக்காரர்கள் அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் அமேசான் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி அன்று மட்டும் அமேசான் பங்குகளின் மதிப்பில் சுமார் 14 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டுக்கான முதல் காலாண்டில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபம் ஈட்டியிருந்தது அமேசான்.