Published : 29 Apr 2022 08:03 PM
Last Updated : 29 Apr 2022 08:03 PM

தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம்: பிஐஎஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கட்டாய ஹால்மார்க் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2022 ஜூன் 01 முதல் அமலுக்கு வரும் எனவும், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு கூறியுள்ளது.

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல் முதல்கட்ட திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும். இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிஐஎஸ் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தர நிர்ணய அமைவனத்தால் ‘ஹால்மார்க்’ செய்வது கட்டாயமாக்கப்பட்ட பிறகு நாட்டின் 256 மாவட்டங்களில், தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தலான பொருட்கள் எச்யுஐடி முத்திரையுடன் ஹால்மார்க் செய்யப்படுகின்றன.

2022 ஜூன் 01, முதல் கட்டாயம் ஹால்மார்க் செய்வதன் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் மேலும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் தேர்வாகியுள்ள மாவட்டங்களின் பட்டியலை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) www.bis.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் கூடுதலாக தங்க நகை/கலைப்பொருள்களில் 20, 23, 24 ஆகிய மூன்று வகை காரட் அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் செய்யும் மையங்களில் எந்த ஒரு நுகர்வோரும் தங்களுடைய ஹால்மார்க் முத்திரையிடப்படாத தங்க நகைகளின் தூய்மையைப் பரிசோதிக்க முடியும்.

4 பொருட்கள் வரையிலான தங்க நகைகளை பரிசோதிப்பதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.45 கட்டணமாக பெறப்படும்.

நுகர்வோரின் தங்க நகைகளை சோதனை செய்ய விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களின் பட்டியலை www.bis.gov.in இணையதளத்தில் அறியலாம்.

நுகர்வோர் வாங்கும் எச்யுஐடி எண்ணுடன் கூடிய ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை, பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய பிஐஎஸ் கேர் (BIS CARE) செயலியில் 'verify HUID' ஐப் பயன்படுத்தி நுகர்வோரே சரிபார்க்கலாம்.

இவ்வாறு இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x