ஒட்டுமொத்த வேளாண் கடனுக்கு சமமானது அதானி குழும வங்கிக் கடன் - மாநிலங்களவையில் பரபரப்பு சாடல்கள்

ஒட்டுமொத்த வேளாண் கடனுக்கு சமமானது அதானி குழும வங்கிக் கடன் - மாநிலங்களவையில் பரபரப்பு சாடல்கள்
Updated on
2 min read

பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் குழுமங்களின் கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி, அதானி குழுமத்தின் கடன் மட்டும் ரூ.72,000 கோடி என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பவன் வர்மா தெரிவித்தார்.

அதாவது அதானி குழுமம் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை ரூ.72,000 கோடி ‘கற்பனை செய்து பார்க்க முடியாத தொகை’ என்று கூறிய பவன் வர்மா, இது நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் கடனுக்குச் சமமான தொகை இது என்று வெடிவைத்தார்.

“நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி, இதில் 1.4 லட்சம் கோடி 5 நிறுவனங்கள் பெற்றுள்ள தொகையாகும். லாங்கோ, ஜிவிகே, சுஸ்லான் எனெர்ஜி, இந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், மற்றும் அதானி குழுமம் மற்றும் அதானி மின்சாரம் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்குகிறது.

இதில் ‘அதானி குரூப்’ என்று அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றின் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் தொகை மட்டும் ரூ.72,000 கோடி நேற்று இதே அவையில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் தொகை ரூ.72,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதானி குழுமம் மட்டுமே ரூ.72,000 கோடி கடன் தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிறுவனத்துடன் அரசுக்கு இருக்கும் உறவு என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களைத் தெரியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தக் குழுமத்தின் உரிமையாளர் கவுதம் அதானி, பிரதமர் எங்கு சென்றாலும் கூடவே செல்வதாகத் தெரிகிறது. எந்த ஒரு நாடாக இருந்தாலும்.. சீனா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என்று பிரதமர் எங்கு சென்றாலும் இவரைப் பார்க்க முடிகிறது.

இந்த நிறுவனத்திற்கு செய்யப்பட்டுள்ள சலுகைகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. குஜராத்தில் உயர் நீதிமன்ற தடை உத்தரவுகள் இருந்தும் இவர் நிறுவனத்திற்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று இவர் பேசிய போது குறுக்கிட்ட பி.ஜே.குரியன், குற்றச்சாட்டுகள் வேண்டாம் என்று எச்சரித்தார்.

இதற்குப் பதில் அளித்த பவன் வர்மா, “நான் ஆதாரங்களின் அடிப்படையில் பேசிக் கொண்டிருக்கிறேன். அது உயர் நீதிமன்றத் தீர்ப்பு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை, ஆனால் இந்த அரசு பதவியேற்றவுடன் அனுமதி அளித்தது.

அதானி குழுமம் இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வலுவுடன் இருக்கலாம், ஆனால் பொருளாதார ஆய்வாளர்களின்படி, இந்தக் கடன் தொகை மீதான வட்டியைச் செலுத்தும் வலுவை இந்த நிறுவனம் இழந்து வந்துள்ளது. மேலும் கடன் தரநிலைகளின் படி இந்தியாவிலேயே அதானி குழுமம் வர்த்தகத்தில் கடன் சுமை அதிகமுள்ள 4-வது பெரிய நிறுவனமாகும்.

இப்படி இருந்தும் கூட, விஜய் மல்லையாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தெரிந்திருந்தும் கூட தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதே அதானி குழுமத்துக்கு ஸ்டேட் வங்கி 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை கடன் வழங்கியுள்ளது.

இவையெல்லாம் இந்த அரசுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா, எனக்கு அரசிடமிருந்து பதில் தேவை. தெரிந்திருந்தால் இதற்கு அரசின் நடவடிக்கைகள் என்ன? இந்தியாவின் அனைத்து விவசாயிகளின் கடன் சுமை ஒரே நிறுவனத்தின் கடன் தொகையாக உள்ளதே!” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார் பவன் வர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in