விபத்து எதிரொலி: 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுகிறது ஓலா

விபத்து எதிரொலி: 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுகிறது ஓலா
Updated on
1 min read

மகாராஷ்டிராவின் புனே நகரில் ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஒன்று திடீரென எரிந்து விபத்துக்குள்ளான நிலையில் நாடு முழுவதும் உள்ள தங்களின் 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தபோதிலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன. இந்நிலையில் குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுடன், சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் சாலையில் நின்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது. அண்மையில் ஓலா நிறுவனம் எஸ்ஒன் மற்றும் எஸ்ஒன் ப்ரோ என இரண்டு மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்நிலையில் புனே நகரில் சாலையில் நின்ற ஓலா எஸ்ஒன் ப்ரோ மின்சார ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வாகனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் குறித்து விசாரிப்பதாக ஓலா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பவீஷ் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் வெளியிட்ட அறிவிப்பில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுகிறோம். எங்களின் பொறியாளர்கள் அத்தனை ஸ்கூட்டர்களையும் முழுமையாக தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். பேட்டரி சிஸ்டம், தெர்மல் சிஸ்டம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே பேட்டரிகளுக்கு AIS 156 பரிசோதனை அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி செய்துள்ளோம். தற்போது ஐரோப்பிய நாடுகளின் தர நிர்ணயமான ECE 136ன் படியும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலாவைப் போல் ஒகிநாவா ஆட்டோடெக் 3000 இ ஸ்கூட்டர்களையும், ப்யூர் EV நிறுவனம் 2,000 வாகனங்களையும் திரும்பப் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in