

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மிகவும் தெளிவானவர் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அருண் ஜேட்லி, அண்மையில் ரகுராம் ராஜன் குறித்து சுப்பிரமணிய சுவாமி முன்வைத்த கருத்துகளால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.
அவர் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மிகவும் தெளிவானவர். நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே துறை ரீதியான வலுவான உறவு உள்ளது. அந்த உறவு மிகவும் முதிர்ச்சியானது. எனவே இந்த இரு துறைகளுக்கும் இடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் குறித்தும் முறையே கலந்தாலோசிக்கப்படும். தவிர, பரபரஸ்பரம் ஒருவரது கருத்துக்கு மற்றொரு தரப்பு மரியாதை கொடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சு.சுவாமியின் கடிதம்:
முன்னதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், "ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியர் அல்ல; அவர் வேண்டுமென்றே பொருளாதாரத்தை சீரழித்து விட்டார். எனவே, உடனடியாக அவரை நீக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பாஜகவின் உறுப்பினர்கள் பலரும் ரகுராம் ராஜன் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருவதாகக் கூறிய நிலையில் அத்தனை சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அருண் ஜேட்லி இவ்வாறு கூறியுள்ளார்.