

உணவு முதல் பலசரக்கு வரை வாடிக்கையாளர்கள் கேட்டதெல்லாம் டெலிவரி செய்யும் மொபைல் போன் அப்ளிகேஷனை இரண்டு தமிழர்கள் ஸ்டார்ட்-அப் முயற்சியாக தொடங்கி, அதில் வெற்றி பெற்ற கதையைப் பார்ப்போம். ZAAROZ என்ற பெயரில் இயங்கி இந்த செயலியின் இலக்கு, தமிழகத்தின் சிறு நகரங்கள் (டவுன்) தான்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு பணிகளை ஸ்மார்ட்டாக மேற்கொள்ள உதவி வருகிறது கைபேசி செயலிகள். சுருக்கமாக சொன்னால் 'அலிபாபாவும் அற்புத விளக்கும்' போல உலகம் மாறியுள்ளது. இங்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் செயலிகள் அற்புத விளக்காகவும், அதை வைத்திருப்பவர்கள் அலிபாபாவாகவும் இயங்குகின்றனர். இத்தகைய சூழலில் மக்களின் எல்லா தேவைகளுக்குமான ஒரே அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளனர் தமிழத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள்.
ZAAROZ என்ற பெயரில் இயங்கி வருகிறது அந்த செயலி. அதன் மூலம் உணவு முதல் பலசரக்கு வரை அனைத்தையும் ஆர்டர் செய்யலாம் என சொல்கின்றனர் அதன் நிறுவனர்கள் ராம் பிரசாத் மற்றும் ஜெயசிம்மன். இருவரும் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். பால்ய காலம் முதலே நண்பர்கள். உள்ளூரில் டேட்டாபேஸ் நிறுவனம் ஒன்றை இருவரும் இணைந்து நிறுவியுள்ளனர். அப்படியே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ZAAROZ டெலிவரி செயலியையும் வடிவமைத்துள்ளனர்.
தங்கள் முயற்சி வெற்றி பெற்றது எப்படி என்பதை விவரிக்கிறார் ராம் பிரசாத். "முதலில் எங்கள் செயலியின் மூலம் உணவு மட்டுமே டெலிவரி செய்யும் வகையில் திட்டமிட்டு, அதனை 2019-இல் லான்ச் செய்திருந்தோம். எங்கள் செயலியின் பயனர்கள் பலசரக்கு போன்றவற்றை இதில் சேர்க்கலாம் என யோசனை தெரிவித்தனர். அதையடுத்து உணவு, காய்கறிகள், பழங்கள், பலசரக்கு, இறைச்சி, மருந்து போன்றவற்றை இப்போது நாங்கள் ZAAROZ மூலமாக டெலிவரி செய்து வருகிறோம்.
இந்த முயற்சியை தொடங்கும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம். இப்போது அதையெல்லாம் கடந்து வந்துள்ளோம். தமிழகத்தின் சிறு நகரங்களில் (டவுன்) தான் ZAAROZ செயலியின் சேவைகளை வழங்கி வருகிறோம். சிதம்பரத்தில் தொடங்கிய பயணம் இப்போது சுமார் 45 லொக்கேஷனில் இந்தச் செயலியின் மூலம் மக்களுக்கு டெலிவரி சேவை வழங்கி வருகிறோம். டெலிவரி பணியை கவனித்து வரும் பிரதிநிதிகள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
வரும் ஆண்டுகளில் எங்கள் செயலியின் பணியை பிற நகரங்களுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் இதனை விரிவாக்கம் செய்வதுதான் எங்கள் நோக்கம்" என சொல்கிறார் அவர்.
பிளே ஸ்டோரில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலியை டவுன்லோடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் அளவில் வணிகர்களுக்கு ஆதரவு (Vocal for Local) கொடுப்பதுதான் இன்றைய தேவையாக உள்ளது. அதற்கு இந்த செயலி உதவி வருகிறது.