பர்சனல் லோன் Vs கிரெடிட் கார்டு... குறுகிய கால தேவைக்கு எது சிறந்தது? - ஓர் ஒப்பீட்டுப் பார்வை

பர்சனல் லோன் Vs கிரெடிட் கார்டு... குறுகிய கால தேவைக்கு எது சிறந்தது? - ஓர் ஒப்பீட்டுப் பார்வை
Updated on
3 min read

கடன் அட்டை Vs தனிநபர் கடன் - வித்தியாசங்கள்: இன்றைய காலகட்டத்தில் திடீரென ஏற்படும் பணத்தேவையை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை கடன் அட்டை மற்றும் தனிநபர் கடன்களும் தருகின்றன. இவை இரண்டில் எது சிறந்த தேர்வு என்பது, ஒருவரின் திருப்பிச் செலுத்தும் திறன், நிதியின் தேவை, எதற்காக கூடுதல் பணம் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து மாறுபடுகிறது.

கடன் அட்டை வசதி, தனிநபர் கடன்கள் ஆகிய இரண்டும் பாதுகப்பில்லாத கடன் வசதிகள் என்றாலும், இவை இரண்டின் கட்டமைப்புகளும் வேறுபட்டவை. கடன் அட்டை சுழற்சி முறை கடன் வசதியை வழங்குகிறது. அதாவது, கடன் அட்டையின் பண அளவைப் பொறுத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். அதன் பின்னர் பில் பணத்தை அதன் முதிர்வு தேதி அல்லது அதற்கு முன்பாக செலுத்தலாம். தனிநபர் கடன்களைப் பொறுத்த வரையில், மொத்த தொகை ஒன்றை கடனாளி மிக எளிதாகப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது. கடன் தொகையை, கடனாளி - கடன்கொடுப்பவர்களுக்கிடையே கடன் பெறும்போது ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி திருப்பிச் செலுத்தலாம்.

திருப்பி செலுத்தும் வசதி - ஒப்பீடு: ஒருவர் விமான டிக்கெட், ஹோட்டல் அறை முன்பதிவு, ஸ்மார்ட் போன் வாங்குவது வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளை கடன் அட்டை மூலமாக மேற்கொள்ள முடியும். மாத வருமானம் ரூ.80,000 பெறும் ஒரு நபருக்கு, ப்ரிமீயம் மொபைல் வாங்கவோ, வீட்டில் சிறிய வகை மாற்றம் செய்யவோ ஒரு 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். கடன் அட்டை மூலமாக அவர் அந்தப் பணத்தை பெறும்போது எப்படி அதனைத் திருப்பிச் செலுத்துகிறார் என்று பார்க்கலாம்.

மீண்டும் மீண்டும் நாம் பயன்படுத்தக்கூடிய கடன் அட்டைகளின் பில் தொகைகளை, அதன் முதிர்வு தேதிகளுக்கு முன்பாக செலுத்தும் வசதி உள்ளது. இந்தத் தொகையின் குறிப்பிட்ட சமமான மாதத் தவணைகளாக செலுத்த (EMIs) கடன் அட்டை நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.

உதாரணமாக, தனிநபர் ஒருவர் 6 இரவுகள் 7 பகல்கள் அடங்கிய ஒரு வெளிநாட்டு பயணச் சுற்றுலாவுக்கு, ஹோட்டல் அறை மற்றும் விமான டிக்கெட்டுகளை ரூ.2.5 லட்சத்திற்கு முன்பதிவு செய்துள்ளார். இந்த 2.5 லட்சம் ரூபாய் 14 சதவீத வட்டி விகிதத்தில், 24 மாத தவணையாக திருப்பி செலுத்தும்படி மாற்றப்படலாம். அதனைத் தொடர்ந்து அவர் மாதத்தவணையாக ரூ.12,003 திருப்பிச் செலுத்துவார்.

இரண்டாவது முறை ரூ.90,000 ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தொகை 12 சதவீத வட்டி விகிதத்தில் 12 மாத தவணையில் திருப்பிச் செலுத்தும்படி மாற்றப்பட்டது. இறுதியாக, ரூ1.6 லட்சத்திற்கு பாத்ரூம் ஃபிட்டிங்குகள் மற்றும் டைல்ஸ் வாங்குகிறார். அது 14 சதவீத வட்டி விகிதத்தில் 12 மாதம் தவணை காலமாக மாற்றப்பட்டு அதற்கான மாதாந்திர தவணைத் தொகையாக செலுத்துவார்.

இதில் ஒரு மாதத்திற்கான மொத்த தவணைகள் முதல் ஆண்டுக்கு ரூ.34, 365-கவும், இரண்டாவது ஆண்டில், ரூ.12,003 ஆகவும் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மொத்தமாக செலுத்தியிருக்கும் தொகை ரூ.5,56,416 ஆக இருக்கும். இதில், ரூ.56,416 வட்டித் தொகை.

அதேபோல தனிநபர் கடன் பெறும் போது அதற்கான வட்டி விகிதங்கள் 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை மாறுபடும். தனிநபர் ஒருவர் 14 சதவீதம் வட்டி விகிதத்தில், இரண்டு ஆண்டுகள் தவணையில் ரூ.5 லட்சம் தனிநபர் கடனாக பெறுகிறார் என வைத்துக் கொண்டால், அதற்கான மாதாந்திரத் தவணைத் தொகை 24,006 ஆக இருக்கும். இதன்படி, தவணைக்காலம் முடிந்து செலுத்தப்பட்டிருக்கும் மொத்தத் தொகை, 5,76,144 இதில், ரூ.76,144 வட்டி.

இந்த உதாரணத்தில், ரூ.5 தொகையை, 24 மாத தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்தும் போது, தனிநபர் கடன் வசதியின் வட்டியானது, கடன் அட்டை வசதியை விட அதிகமாக இருக்கிறது. இதற்கிடையில், கடன் அட்டை மூலம் வாங்கப்பட்ட ஸ்மார்ட் போன் பரிவர்த்தனை ஒப்பீட்டு அளவில் குறைந்த விகிதத்தில், 12 மாத கால தவணைகளாக செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட தவணைக்காலமாக இருக்கும் தனிநபர் கடன் வசதியில், இத்தகைய ஏற்பாடுகள் சாத்தியம் இல்லை.

எந்த கடன் வசதி சிறந்தது? - கடன் அட்டை வசதி மற்றும் தனிநபர் கடன்கள் வசதி இரண்டில் எதனைத் தேர்தெடுப்பது என்பது, தனிநபரின் திருப்பிச் செலுத்தும் திறன், எதிர்காலச் செலவு, தற்போதைய மாதாந்திர செலவு ஆகியவைகளைப் பொறுத்தது. ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது, தனிநபர் கடன் வசதியை விட, கடன் அட்டை வசதியில் வட்டி கிட்டத்தட்ட 26 சதவீதம் குறைவாக இருப்பதால், கடன் அட்டை வசதியே சிறந்தது. பெரும்பாலன கடன் வழங்குபவர்கள் தனிநபர் கடன் வழங்கும் போது, 0.99 சதவீதம் முதல் 1.99 சதவீதம் வரை செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கின்றனர். இந்த நடைமுறை கடன் அட்டை வசதியை இன்னும் நன்மையானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாற்றுகிறது.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வேறு சில செலவுகள் காரணமாக தனிநபர் ஒருவரால் முதல் வருடத்திற்கு 34,365 ரூபாய் தவணை செலுத்த முடியாது என்றால் தாராளமாக அவர் தனிநபர் கடன் வசதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

நவீன வாழ்க்கை முறை மனிதர்களிடம் பல்வேறு மாற்றங்களை விதைத்துள்ளது. ஒரு காலத்தில் ஆரம்பரமாக பார்க்கப்பட்டவை இன்று அத்தியாவசியமாக மாறியுள்ளன. சின்னதாக குண்டுமணி தங்கம் வாங்க வேண்டும் என்றால் நீண்ட காலம் சிறுவாட்டு காசு சேமித்து வைத்து செலவுகளை மேற்கொண்டது ஒரு காலம். இன்றைய நவயுக மனிதர்களுக்கு புதிய மொபைல் போன் வாங்குவது, வீட்டை மாற்றி அமைப்பது, அதற்காக பர்னிச்சர்கள் வாங்குவது, புதிய லேப் டாப் என தேவைகளும் அதிகம், அதனை மேற்கொள்ள பணம் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். வளர்ந்து வரும் கடன் சந்தை, நிதிச் சேவைகளின் ஆழமான ஊடுருவல், அதிகரித்துவிட்ட டிஜிட்டல் பரிமாற்ற வசதி போன்றவை நவயுக மனிதர்களுக்கு புதிய மாற்றங்களை அனுபவிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இதனால் பலர் தங்களின் குறுகிய கால நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள கடன் பெற விரும்புகின்றனர்.

இவ்வாறு குறுகிய கால தேவைகளுக்கு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதா அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்துவதா என்ற கேள்வியும் குழப்பமும் பலருக்கும் இருக்கும். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தனிநபர் ஒருவரின் திருப்பிச் செலுத்தும் திறன், தற்போதை கடன் சுமை மற்றும் எதிர்காலச் செலவுகளைப் பொறுத்தது. என்றாலும் இந்த இரண்டுக்குமான சாதக - பாதகங்களை நிபுணர்களிடம் கேட்டறிந்தபோது கிடைத்த தகவல்களின் தொகுப்பே மேற்கண்ட இந்தக் கட்டுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in