திறம்பட செயல்படும் ஊழியர்களுக்கு பிரமாண்ட பேனர்... வேற லெவல் அங்கீகாரமும் பின்புலமும்!
தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் திறம்பட செயல்பட்டு வருபவர்களுக்கு வானளாவிய பேனர்களை, பன்னடுக்கு மாடிகளுக்கு மேல் வைத்து அங்கீகாரமும் கவுரவமும் அளித்து வருகிறது, இந்தூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான இன்போ பீன்ஸ் டெக்னாலஜிஸ். அந்த நிறுவனம் ஏன் புது வழியில் இப்படி ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது? அதற்கான காரணம் என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
பொதுவாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சில வழிகளை ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றுவது வழக்கம். இந்த விதி அனைத்து துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதாவது, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி என்ற அடிப்படையில் ஊழியர்களின் பணித்திறனை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் 'சிறந்த ஊழியர்' (Best Employee) என்ற அறிவிப்பை நிறுவனங்கள் வெளியிடும். அதனை அலுவலக அளவில் தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்.
அதோடு, அந்த அங்கீகாரமானது, அலுவலகத்தின் வாட்ஸ்அப் குரூப், ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களிலும் பகிரப்படும். அது சம்பந்தப்பட்ட ஊழியரின் நண்பர்களின் கவனத்திற்கு சென்றால் பாராட்டுகளும் குவியும். சில நிறுவனங்கள் நினைவு பரிசு கூட கொடுக்கும்.
அதே நேரத்தில், அந்த ஊழியருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு நாமும் இப்படி நம் திறனை காட்ட வேண்டும் என்ற என்ற எண்ணம் எட்டிப் பார்க்கும். அதனால் அவரும் தனது வேலையில் மும்முரமாக ஈடுபடுவார். மொத்தத்தில் நிறுவனம் எதிர்பார்க்கும் வேலை நடக்கும். அடுத்த அறிவிப்பில் வேறொரு ஊழியரோ அல்லது அதே ஊழியரே கூட வரலாம். மீண்டும் அதே போல சிறந்த ஊழியருக்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவிக்கும். இது அப்படியே தொடரும்.
இத்தகையச் சூழலில் ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் மாத்தி யோசித்து, புதிய பாதையை அமைத்துள்ளது இந்தூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான இன்போ பீன்ஸ் டெக்னாலஜிஸ் (InfoBeans Technologies) என்ற நிறுவனம். டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் மற்றும் புராடக்ட் இன்ஜினியரிங் நிறுவனம் இது. சுமார் 1500 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அதில் தங்கள் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் டாப் 12 ஊழியர்களை 'வாவ் அணி' (Wow Squad) என அறிவித்து சிறப்பித்துள்ளது இன்போ பீன்ஸ்.
இந்த அணியில் இடம்பெற்றுள்ள 12 ஊழியர்களும் சிரித்த முகத்தோடு இருக்கும் படங்களைக் கொண்டு, இந்தூர் நகரின் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் வானுயர விளம்பர பதாகையாக வைத்து சிறப்பித்துள்ளது இன்போ பீன்ஸ். மேலும், அதில் அந்த ஊழியரின் பெயரும், அவரது பதவி குறித்த விவரமும் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏன் இந்த ஏற்பாடு?
"தற்போது இந்தூர் நகரை சுற்றிலும் வாவ் அணியினரின் எட்டு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாவ் அணியில் இடம்பெற்றுள்ள 12 ஊழியர்களும் நெடு நாட்களாக நிறுவனத்திற்கு சிறந்த பங்களிப்பை அவர்கள் பணியாற்றி வரும் எங்கள் கிளைண்டுகளுக்கு (Clients) வழங்கி வருகிறார்கள். இது ஏதோ அவர்களது ஒரே ஒரு அப்ரைஸலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல" என சொல்கிறார் இன்போ பீன்ஸ் நிறுவன பீப்பிள் குழு துணைத் தலைவர் கனுபிரியா (Kanupriya). இது தங்கள் தரப்பில் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் எனவும் சொல்லியுள்ளார் அவர்.
"இந்த விளம்பரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஊழியர் வசித்து வரும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவருக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் மத்தியில் அவர் பிரபலம் ஆவார். இதில் இடம் பெற்றுள்ள ஊழியர்களை தேர்வு செய்ய நான்கு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வாவ் அணியில் இடம்பெற தகுதி வாய்ந்த ஊழியர்களை வரும் நாட்களில் அடையாளம் கண்டு, அவர்களையும் அங்கீகரிப்போம். இதில் இடம்பெற்றுள்ள ஊழியர்கள் அனைவரும் சமமான திறன் கொண்டவர்கள். இதில் யாரும் யாரை விடவும் சளைத்தவர்கள் அல்ல. அடுத்ததாக புனே நகரிலும் இதேபோல ஏற்பாட்டை செய்யவுள்ளோம். அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது" என சொல்கிறார் அவர்.
முன்னதாக, இன்போ பீன்ஸ் நிறுவனத்தில் திறம்பட செயல்படும் ஊழியர்களுக்கு விலை உயர்ந்த செல்போன், கார் முதலானவை பரிசுகளாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
