

சென்னை: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழக அரசின் நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புத்தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப் மற்றும் புதிய தொழில்களைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி டிட்கோ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான ஆதார நிதியின் கீழ் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனம் மற்றும் புதிய துறைகளில் தொழில் தொடங்குபவர்கள் இந்த நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம். கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்துள்ள, தமிழகத்தில் உள்ள, ஆண்டுக்கு ரூ.25 கோடி மேல் வரவு - செலவு உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், கிளவுட் கம்யூடிங், ரோபோடிக்ஸ் பிளாக் செயின், பைசர் பாதுகாப்பு, அக்ரிடெக், ஹெல்த்டெக், காலநிலை மாற்றம், பின்டெக், கேமிங் உள்ளிட்ட புதிய துறைகளில் நிறுவனம் தொடங்குபவர்களும் இந்த நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான முழு விவரங்களுக்கு http://www.tnifmc.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.