Published : 20 Apr 2022 03:58 PM
Last Updated : 20 Apr 2022 03:58 PM

நிலக்கரி பற்றாக்குறை, விலை உயர்வு; அதிகரிக்கும் மின் உற்பத்தி செலவு: மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு பச்சைக்கொடி?

மும்பை: நாடுமுழுவதும் மின்சார தேவை அதிகரித்து வரும் நிலையில் போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாததால் கூடுதல் விலை கொடுத்து நிலக்கரியை தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. எனவே இதற்கான கூடுதல் செலவுக்காக நுகர்வோர் மின்சாரக் கட்டணத்தை மாநில அரசுகள் உயர்த்திக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால் இந்தியாவின் மின்சாரத் தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை தற்போது 15சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

இதனால் அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உக்ரைன்- ரஷ்ய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

குறையும் நிலக்கரி கையிருப்பு

இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது. மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.

நாடுமுழுவதும் நிலக்கரி விநியோக நிலையைக் கண்காணித்து வரும் மத்திய மின்சார அமைச்சகம், மின்சார உற்பத்திக்கு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பெறப்படும் நிலக்கரியைத் தேவையான அளவுக்கு கையிருப்பில் வைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தது.

மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது. பற்றாக்குறை ஏற்பட்டால், அதனைச் சரிசெய்ய ஏற்கெனவே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர கூடுதலாக வழங்க வாய்ப்பில்லை என்பதை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் கூடுதலாக தேவைப்படும் நிலக்கரியை பிரீமியம் விலையில் வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த 2021 அக்டோபரில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு தீர்ந்தததால் 5 மாநிலங்களில் மின்தடை ஏற்படும் சூழல் உருவானது. இந்தநிலையில் 6 மாதங்களுக்குள் மீண்டும் இதேபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

மின்சார அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, ஏப்ரல் 18 ஆம் தேதி நிலவரப்படி மின் உற்பத்தி நிலையங்களில் அரசு வழங்கிய மானிய விலை நிலக்கரி எட்டு நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. தற்போது கோடைக்காலம் உச்சம் பெற்று வருவதாலும், மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், எட்டு நாட்கள் நிலக்கரி இருப்பு வைத்துள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வரும் நாட்களில் நெருக்கடி ஏற்படலாம் எனத் தெரிகிறது.

கோடையில் மின் தேவை உயர்வு

உச்ச மின் தேவை கடந்த ஆண்டு இல்லாத அளவுக்கு 200 ஜிகாவாட் (ஜி.டபிள்யூ.) அளவை எட்டியது. தற்போதைய கோடைகாலத்திலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது. ஆனால் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு போதுமானதாக இல்லை.

நிலக்கரி அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி 2022-ம் ஆண்டு ஜனவரி காலகட்டத்தில், மின் துறையின் நிலக்கரி இறக்குமதி 22.73 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 39.01 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் மின்தேவை என்பது அதிகரித்து வருவதால் நிலக்கரியின் தேவை கூடுதலாக உள்ளது.

கூடுதல் விலையில் நிலக்கரி

இதனையடுத்து கூடுதல் விலை கொடுத்து நிலக்கரியை தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ள அனுமதியின் பேரில் இந்த இறக்குமதி நடைபெறுகிறது. அதானி குழுமம், டாடா பவர் மற்றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் கூடுதல் விலைகொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரித்து அதனை மாநிலங்களுக்கும் விற்கின்றன. ஆனால் இவ்வாறு கிடைக்கும் மின்சாரம் என்பது கூடுதல் விலையில் விற்கப்படும். இதனை வாங்கும் மாநில மின்விநியோக நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை சுமக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இந்தநிலையில் அதிக விலையுள்ள இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் செலவை நுகர்வோரிடம் வசூலித்து கொள்வது, அதாவது கூடுதலான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கும் திட்டத்தை மத்திய மின்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் அதிக விலையை நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

எஸ்ஸாரின் 1,200-மெகாவாட் சாலயா ஆலை மற்றும் அதானியின் 1,980-மெகாவாட் ஆலை முந்த்ரா ஆலை போன்வற்றில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டிசம்பர் 2022 வரை கூடுதல் செலவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதற்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனை மத்திய மின்துறை செயலர் அலோக் குமாரும் கூறியுள்ளார். இதன் மூலம் வரவிருக்கும் நாட்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x