

சான் பிரான்சிஸ்கோ: வெறும் நூறு நாட்களுக்குள் சுமார் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix). இதன் எதிரொலியாக அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. கடந்த 1997 முதல் இந்நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதன் சந்தாதாரர்களை பெருமளவு சரிந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டை 221.6 மில்லியன் சந்தாதாரர்களுடன் நிறைவு செய்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டை காட்டிலும் சற்று குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மூன்று மாதங்களில் சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைத்துள்ளதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டுக்கான காலாண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக அந்நிறுவனம் பெற்றுது குறிப்பிடத்தக்கது .
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் ரஷ்ய நாட்டில் தங்கள் நிறுவன சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளதும் ஒரு காரணம் என நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மேலும் இரண்டு மில்லியன் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக 2011 வாக்கில் சுமார் 8 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ். கடந்த 2019ல் அமெரிக்க அளவில் சந்தாதாரர்கள் சரிவை நெட்ஃப்ளிக்ஸ் எதிர்கொண்டது.
தங்கள் நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் ஈட்டவில்லை என நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. கரோனா தங்கள் வளர்ச்சியை மங்க செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நிறுவன பங்குகளின் மதிப்பில் 25 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளதாம். இது மேலும் குறைந்தால் முதலீட்டாளர்களுக்கு சிக்கல் எனத் தெரிகிறது. கடந்த ஐந்து காலாண்டுகளில் நான்கு முறை சந்தாதார்கள் வளர்ச்சியில் நெட்ஃப்ளிக்ஸ் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பிற ஓடிடி நிறுவனங்களான டிஸ்னி மற்றும் ஆப்பிளின் கடுமையான போட்டி காரணமாகவும் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக தெரிகிறது. சந்தாதாரர்கள் தங்களது கணக்கு விவரங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்தால் கூடுதலாக அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அப்போது சொல்லியிருந்தது.
அதே நேரத்தில் சந்தாதாரர்களை கவரும் வகையில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி தனது பயனர்களுக்கு இலவசமாக வீடியோ கேம்களையும் அறிமுகம் செய்யத் தொடங்கியது. கடந்த ஆண்டு முதல் இந்த அம்சம் பயனர்களுக்கு ரோல் அவுட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெறும் நூறு நாட்களுக்குள் சுமார் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸுக்கு பெரும் சவாலை முன்வைத்துள்ளது.