

இன்றையச் சூழலில் கடன் இல்லாத ஒருவரைப் பார்ப்பது அரிது. கரோனா தாக்கத்துக்குப் பிறகு கடன் பிரச்சனை அதிகமாகியுள்ளது. 'கிரெடிட் கார்டு' கொண்டு கடன் பெறுவதே பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது. அதேநேரம், கிரெடிட் கார்டுக்கு போட்டியாக சமீப காலத்தில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது பிஎன்பிஎல் (BNPL - Buy Now Pay Later) எனப்படும் ‘இப்போது வாங்குகள், பிறகு செலுத்துங்கள்’ திட்டம். பிஎன்பிஎல் என்பது ஒரு குறுகிய கால கடன் திட்டம்.
ஆன்லைன் தளங்களில் இந்தத் திட்டம் மூலம் குறிப்பிட்ட பொருளையோ அல்லது சேவையோ வாங்கி, அதற்கானத் தொகையை வட்டியில்லாமல் சுமார் 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் செலுத்த முடியும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் வாங்க விரும்பும் பொருளுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கடன் நிறுவனம் பணம் செலுத்தும். அந்த நிறுவனத்துக்கு 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் நீங்கள் அந்தப் பணத்தை வட்டியில்லாமல் திருப்பி செலுத்த வேண்டும். மொத்தமாகவோ அல்லது EMI எனப்படும் மாதாந்திர தவணைகளாகவோ திருப்பி செலுத்தும் வசதிகள் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களை பொறுத்து இந்தத் திட்டம் கிடைக்கிறது.
கிரெடிட் கார்டு மற்றும் பிஎன்பிஎல் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். இரண்டுமே பயனாளிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் சில விருப்பங்களை வழங்குகின்றன. எனினும் இரண்டுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.
கிரெடிட் கார்டு vs பிஎன்பிஎல் (BNPL) - எது சிறந்தது?
> இரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு கடன் அட்டைகளை பெறுவதற்கான அணுகல்தான். கிரெடிட் கார்டை பொறுத்தவரை, பயனாளி தேவையான பரிவர்த்தனை வரலாறு கொண்டிருக்கிறாரா அல்லது ஏற்கெனவே வேறு ஏதேனும் கடன் பெற்றிருக்கிறாரா என்பது போன்றவை சரிபார்க்கப்படும். இதுபோன்றவை சரிபார்த்தாலும், விண்ணப்பித்த பின் கடன் அட்டை கிடைப்பதை தெரிந்துகொள்ளவே 2-3 வாரங்கள் ஆகும்.
பிஎன்பிஎல் பொறுத்தவரை, எளிதான அணுகல் மூலம் இந்த வசதியை பெற முடியும். ஏதேனும் ஆன்லைன் தளங்களில் நீங்கள் வாங்கும் பொருளுக்கு எளிதாக இந்த பிஎன்பிஎல் வசதியை தேர்வு செய்ய முடியும்.
> கிரெடிட் கார்டில், உபயோகிக்கும் பணத்தை சுமார் 45 நாட்களுக்குள் வட்டியில்லாமல் திருப்பிய செலுத்த முடியும். அதுவே பிஎன்பிஎல்லில் இந்த வசதி 15 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை கிடைக்கிறது.
> கிரெடிட் கார்டில் பயனாளி நிலுவைத் தொகை முழுவதையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் திருப்பி செலுத்தவில்லை முடியவில்லை என்றால் வட்டி விதிக்கப்படும். இந்த வட்டி விகிதம் (ஆண்டுக்கு 36% முதல் 48%.) என்பதுடன் அபராதம் வேறு விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் தாமதமாக திருப்பி செலுத்துவது பயனாளியின் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். பிஎன்பிஎல்லில் வட்டி எதுவும் இல்லை. எனினும், கடன் தொகை திருப்பிச் செலுத்த நீண்ட நாட்கள் ஆகிறது என்றால், அதற்கு தாமதக் கட்டணம் என்கிற பெயரில் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.3000-க்கு 30 நாட்களுக்கு ரூ.70 வரை வசூலிக்கிறது.
அதேநேரம், கிரெடிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம், சேர்ப்பு கட்டணம் ஆகியவை உண்டு. அதுவும் ப்ரீமியம் கார்டுகளுக்கு இந்த வகை கட்டணங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், பிஎன்பிஎல்லில் இதுபோன்ற எந்த கட்டணமும் கிடையாது.
> கிரெடிட் கார்டுக்கு சில உச்சவரம்புகள் உள்ளன. பயனாளியின் நிதி நிலைமையை பொறுத்து ரூ.20,000 முதல் பல லட்சங்கள் வரை உச்சவரம்புகள் உள்ளன. ஆனால் பிஎன்பிஎல்லில் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.60,000 வரையே கடன் வசதி வழங்கப்படும்.
> கிரெடிட் கார்டை உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்த முடியும். இந்த வசதி பிஎன்பிஎல்லில் இல்லை.
> பிஎன்பிஎல் வசதி மூலம் குறைந்த பணமே கடனாக கொடுக்கப்படுகிறது என்றாலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன்களை பெற முடியும். இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரேநேரத்தில் பல நிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதால் பயனாளி அவற்றை திருப்பி செலுத்துவது கடினமாக மாறும்.
> வாடிக்கையாளர் தரவு தனியுரிமையும் இந்த வசதியில் கேள்விக்குறிய ஒன்றாக உள்ளது. கடந்த நவம்பரில், பிஎன்பிஎல் கடன் வசதி கொடுக்கும் 1,100 ஆன்லைன் ஆப்களில் 600 சட்டவிரோதமானது என்று கண்டறியப்பட்டுள்ளதும் இதன் அச்சத்தை அதிகமாகியுள்ளது.
மொத்தத்தில் கிரெடிட் கார்டு பல வசதிகளை பயனாளிகளுக்கு கொடுத்தாலும், எளிதான அணுகல், வட்டியின்மை போன்ற காரணிகளால் கடந்த சில ஆண்டுகளாகவே பிஎன்பிஎல் வசதி இந்தியாவில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக, புதிதாக கடன் வாங்குபவர்கள், வங்கிகளால் கடன் வசதி பெறுவதில் புறக்கணிக்கப்பட்டவர்கள் போன்றோர்களின் விருப்பமான தேர்வாக பிஎன்பிஎல் உருவெடுத்துள்ளது.
அமேசான் பே லேட்டர், பிளிப்கார்ட் பே லேட்டர், லேஸிபே (LazyPay), மொபிக்விக் ஸிப் (MobiKwik Zip), போஸ்ட்பே (PostPe) என ஏற்கனவே முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கு மத்தியில் புதிதாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் FlexiPay, ஐசிஐசிஐ வங்கியின் ஐசிஐசிஐ பேலேட்டர், ஆக்சிஸ் வங்கியின் பிரீசார்ஜ், ZestMoney, Paytm Postpaid, Capital Float என கிட்டத்தட்ட டஜன் கணக்கிலான நிறுவனங்கள் இந்தியாவில் இந்த வசதியை இப்போது வழங்கி வருகின்றன.
இதுபோன்ற காரணிகளால் இந்திய பிஎன்பிஎல் சந்தையின் வளர்ச்சி என்பது 2020-ல் இருந்த 569 சதவீதம் என்பதை தாண்டி 2021ல் 637 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று RazorPay அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அசுர வளர்ச்சியால், இந்த பிஎன்பிஎல் சந்தையானது இப்போதிருக்கும் 3-3.5 பில்லியன் டாலர் பரிவர்த்தனை 2026 ஆம் ஆண்டில் 45 முதல் 50 பில்லியன் டாலரைத் தொடும் என கணித்திருக்கிறது ரெட்ஸீர் (RedSeer) என்கிற ஆலோசனை நிறுவனம்.