

டோங்க்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் துணைகொண்டு காளான் வளர்ப்பு மூலம் தொழில்முனைவோராக மாறியுள்ளனர் ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் வசித்து வரும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். இந்த வெற்றிக்கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றுதான் இந்த டோங்க் மாவட்டம். கடந்த 2006 வாக்கில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்த நாட்டின் பின்தங்கிய 250 மாவட்டங்களில் டோங்க் மாவட்டமும் ஒன்று. அதோடு பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்று வரும் மாவட்டமாகவும் இது உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 14,21,326. சுமார் 1,093 கிராமங்களை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தின் மக்கள் தொகையில் 62.46 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். எனினும், நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான டோங்க் மாவட்டத்தில் வசித்து வரும் ஊரகப் பகுதியை சேர்ந்த பெண்கள்தான் இப்போது தொழில்முறை ரீதியாக காளான் சாகுபடி செய்து வருகின்றனர். அதன் மூலம் தங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தையும் அவர்கள் ஈட்டி வருகின்றனர். இதனால் தற்போது தன்னிறைவுடனும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
நிவாய் வட்டாரத்தில் மட்டுமே சுய உதவி மகளிர் குழுக்களைச் சேர்ந்த 80 பெண்கள் காளான் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021 ஆகஸ்ட் வாக்கில் மாவட்டத்தின் முண்டியா, குன்சி மற்றும் ரஹோலி கிராமப் பஞ்சாயத்துகளில் தொடங்கப்பட்ட திட்டம்தான் காளான் வளர்ப்புத் திட்டம். இது முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளை பட்டன் காளானில் அதிக மருத்துவ குணமும், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளும் இதன் சாகுபடியை மேற்கொள்ள அவர்களுக்கு உதவியுள்ளது. முக்கியமாக, சந்தையில் இதற்கு நல்ல டிமாண்ட் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். அதோடு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நேரடியாக தனிநபர் நலன் சார்ந்து இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நல்ல வருமானம்: ஊரக பகுதிகளில் இயங்கி வரும் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இயங்கி வரும் ராஜஸ்தான் கிராமீன் அஜீவிகா விகாஸ் பரிஷத் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையும் காளான் சாகுபடிக்கு தேவையான விதை மற்றும் இன்னும் பிற உதவிகளை குழுக்களுக்கு செய்து கொடுத்துள்ளன.
இந்நிலையில், இந்த புதிய தொழில் வாய்ப்பு மூலம் ஒவ்வொரு சுய உதவிக் குழுவிலும் உறுப்பினராக உள்ள மகளிர், கடந்த ஆறு மாத காலமாக சராசரியாக மாதத்திற்கு ரூ.10,000 வரை லாபம் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் மேற்பார்வையில் பணிகள் நடப்பதாகவும். காளான்களை சுத்தம் செய்வது மற்றும் பேக் செய்வது மாதிரியான பணிகளை குழுக்களில் உள்ள உறுப்பினர்களே செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட உறுப்பினரின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்கு நிலைகளை கொண்ட காளான் சாகுபடியை 360 சதுர அடி நிலத்தில் மேற்கொண்டு வருவதாக குழுக்களின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 30 முதல் 45 நாட்களில் காளான்களை அறுவடை செய்து விடலாம் எனவும், இந்தப் பணியை மேற்கொண்டு வரும் பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும், கரோனா நெருக்கடி சூழலுக்கு பிறகு தங்களுக்கு காளான் வளர்ப்பு பெரிய அளவில் கைகொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணியை செய்து வரும் சிலர் மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாகவும் உருவாகியுள்ளனர்.
ஜெய்ப்பூரில் இயங்கி வரும் விவசாய மண்டிகள் மற்றும் காய்கறி சந்தைகளுக்கு டோங்க் மாவட்டத்தில் சாகுபடியாகும் காளான்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தகவல் உறுதுணை: தி இந்து (ஆங்கிலம்)