

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் தொழில்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி பிரதிநிதிகள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது.
தொழில்துறையினர் பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் விஷயங்களை நிதியமைச்சரிடம் குழுவினர் தெரிவித்தனர். அத்துடன் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) முறையை 2015-ல் அமல்படுத்த வேண்டும் என்றும் பொது வரி விதிப்பு தடுப்பு (ஜிஏஏஆர்) விதிமுறைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குழுவினர் நிதியமைச்சரை கேட்டுக் கொண்டனர்.
நிறுவனங்கள் மீது முன்தேதியிட்டு வரி வசூலிக்கக் கூடாது என்றும், இத்தகைய சூழலை மிகவும் முக்கியமான சமயத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது தொடர்பாக அரசு தெளிவான கொள்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்-அப் வரிச் சலுகையை அரசு அளிக்க வேண்டும் என ஃபிக்கி பரிந்துரைத்துள்ளதாக அதன் தலைவர் சித்தார்த் பிர்லா தெரிவித்தார்.