Published : 17 Apr 2022 08:20 AM
Last Updated : 17 Apr 2022 08:20 AM

எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவின் இடத்தை அமெரிக்கா கைப்பற்ற முயல்கிறதா? - உலக நாடுகளின் வர்த்தக உறவில் புதிய அத்தியாயம்

ரஷ்யாவின் போர்வெறி நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் செல்கிறது. உக்ரைன் மீது பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் போர்த் தாக்குதல் இன்று வரை தொடர்கிறது.

மனித உரிமை மீறலில் ஈடுபடும் நாடுகளை கண்டிக்கும் விதமாகவும், அந்நாடுகளின் எதேச்சதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் உலக நாடுகள் அந்தக் குறிப்பிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதுண்டு. அந்த வகையில் ரஷ்யாவின் போர்த் தாக்குதலை பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன.

ரஷ்யாவில் முதலீடு செய்ய, ரஷ்யாவுக்கு முக்கியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய, ரஷ்யாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. ரஷ்ய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், ரஷ்யாவுடன் ஏனைய நாடுகள் டாலரில் வர்த்தகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. 630 பில்லியன் டாலர் அளவிலான ரஷ்யாவின் அந்நிய செலவாணி இருப்பு முடக்கப்பட்டது.

அனைத்திலும் உச்சமாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால், உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவின் வருவாயில் 40 சதவீதம் பங்கு எண்ணெய் ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது. அந்த வகையில் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடை ரஷ்யாவை நிலைகுலையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தோல்வியில் முடியும் பொருளாதார தடைகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பல சமயங்களில், எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் தோல்வியில் முடிந்திருக்கின்றன. உலகமயமாக்கலுக்குப் பிறகு, பொருளாதாரத் தடைகள் என்பது ஒரு நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை. தற்போது ரஷ்யாவின் மீதான அமெரிக்காவின் தடையும் அப்படியானதுதான். அமெரிக்கா அதன் எண்ணெய் தேவையில், 8 சதவீதம் அளவிலே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. எனில், ரஷ்யா கச்சா எண்ணெய் மீது தடை விதிப்பதால், அமெரிக்காவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள், அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்து இருக்கின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்தாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான தடைக்கு முழுதாக உடன்பட முடியாத நிலையில் அந்நாடுகள் உள்ளன.

பொருளாதாரத் தடைகள் நீண்ட கால அளவில் தாக்குப்பிடிக்காது என்ற போதிலும், பொருளாதாரத் தடைகள் உலக நாடுகளின் வர்த்தகப் போக்கில் சில முக்கியமான மாற்றங்களுக்கு வித்திடுவதுண்டு.

அமெரிக்காவின் திட்டம்

அமெரிக்கா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆனால், உலக அளவில் எண்ணெய் விலையை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக ரஷ்யாதான் உள்ளது. இந்நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ரஷ்யாவின் எண்ணெய் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, தன்னை எண்ணெய் ஏற்றுமதில் முதன்மையாக நாடாக நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது என்று கூறப்படுகிறது.

தற்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடை விதிக்காமல் இருப்பதற்குக் காரணம், அந்நாடுகள் அவற்றின் எண்ணெய் தேவைக்கு ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நான்கு நாடுகள் மட்டும் தினமும் 6 மில்லியன் பீப்பாய்கள் அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில் உள்ளன. எனில், எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமென்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் செய்யும் அளவுக்கு அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கான சாத்தியம் இருக்கிறதா?

2010-க்கு முன்னால் எண்ணெய் உற்பத்தியில் பின் தங்கிய இடத்தில் இருந்த அமெரிக்கா, கடந்த பத்தாண்டுகளில் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எண்ணெய் உற்பத்தில் முதல் பத்து பெரிய நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் அதன் கட்டமைப்பை இன்னும் சில ஆண்டுகளிலே விரிவுபடுத்தும் சாத்தியத்தை அமெரிக்கா கொண்டிருப்பதாகவும், ஆனால் அத்தகைய உற்பத்தி வழக்கமான உற்பத்தியைவிட அதிக செலவு பிடிக்கக் கூடியது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும், அமெரிக்கா முன் பல்வேறு சவால்கள் உள்ளன. தற்போது உலக அளவில் குறைந்த விலையில் தரமான எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. ஈரான் அதிக எண்ணெய் உற்பத்திக்கான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து, அமெரிக்கா ஈரானை ஓரம்கட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்வதை அமெரிக்கா தடுக்க முயற்சித்தால், அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் ஈரானை முதன்மைபடுத்தத் தொடங்கும்.

தவிர, அமெரிக்காவின் ஆதிக்கத்தை ரஷ்யாவும் ஒபெக் நாடுகள் (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) பார்த்துக்கொண்டிருக்காது. மற்ற எண்ணெய் வள நாடுகள் எண்ணெய் விலையை குறைத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முயலும் - தற்போது ரஷ்யா செய்ததுபோல. அது அமெரிக்காவுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக அமையும். ஏனென்றால், அமெரிக்கா அதன் தற்போதையக் கட்டமைப்பில் குறைந்த செலவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியாது.

வர்த்தக உறவில் புதிய அத்தியாயம்

அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதியில் முதன்மை நாடாக ஆகிறதோ இல்லை. அமெரிக்காவின் நகர்வு சர்வதேச வர்த்தகச் சூழலில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும். அமெரிக்காவின் தடையால் தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்கி வருகிறது. இதுவரையில், 2 சதவீதம் அளவிலே இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வது வந்த நிலையில், இப்போது ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்பால் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கூடுதலாக இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அமெரிக்காவின் நகர்வு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கூடியதாக மட்டுமல்லாமல், உலக நாடுகளின் வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்துக்கும் வித்திடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x