

புதுடெல்லி: மின்சார இருசக்கர வாகனத்தில் பேட்டரி தொடர்பான சிக்கல்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் சுமார் 3215 இ-ஸ்கூட்டர்களுக்கு திரும்பப் பெறும் அழைப்பு விடுத்துள்ளது ஒகினாவா ஆட்டோ டெக் தனியார் நிறுவனம்.
இந்தியாவில் அண்மைக் காலமாக மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வும், சூழலியலும் இதற்கு முக்கியக் காரணங்கள். உள்நாடு தொடங்கி உலக சந்தையில் அமோக விற்பனை மேற்கொண்டு வரும் பல நிறுவனங்கள் இந்தியச் சந்தையைக் குறிவைத்துள்ளன. இருந்தாலும் மின்சார இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது தீப்பற்றி எரிவது தொடர்பான செய்திகள் மக்களிடையே ஒரு வகையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினாவா தனது தயாரிப்பான ப்ரைஸ் புரோ ஸ்கூட்டரை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி சுமார் 3215 ப்ரைஸ் புரோ ஸ்கூட்டர்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாம். இதில் பேட்டரி தொடர்பான சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதனைக் கண்டறிந்து, உடனடியாக சீர் செய்யப்படும் என நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது வாகன ஹெல்த்-செக் அப் சார்ந்த முகாம்களில் ஒரு பகுதி எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஒகினாவா டீலர்ஷிப்களில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும். ஆய்வில் சிக்கல் இருப்பது உறுதியானால் இலவசமாக அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தனித்தனியே தங்கள் தரப்பில் தொடர்புகொள்ளப்படுவார்கள் என்றும் ஒகினாவா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் நலன் கருதி இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒகினாவா ப்ரைஸ் புரோ ஸ்கூட்டரில் ஒரு குறிப்பிட்ட பேட்ச் மட்டுமே தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது. தொடர்ச்சியாக ஒகினாவா ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசின் அழுத்தமும் ஒரு காரணம் எனத் தெரிகிறது.
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம், தானாக முன்வந்து மறு ஆய்வுக்கு உட்படுத்த திரும்பப் பெறும் அழைப்பு விடுத்துள்ளது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.