

பெங்களூரு: ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ‘ரெட்ரயில்’ (redRail) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது ரெட்பஸ் தளம்.
பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள பயன்பட்டு வருகிறது ரெட்பஸ் தளம். வலைதளம் மற்றும் மொபைல் செயலிகளை பயன்படுத்தி இந்த தளத்தின் மூலம் முன்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2006-இல் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இன்று சுமார் 2500 பேருந்து ஆப்பிரேட்டர்களுடன் பயணிகளை இணைத்து வருகிறது ரெட்பஸ்.
கடந்த 2013-இல் ஐபிஐபிஓ நிறுவனம் ரெட்பஸ் தளத்தை வாங்கியது. இந்நிலையில், இப்போது ஆன்லைன் மூலமாக இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ‘ரெட்ரயில்’ என்ற தளத்தை தொடங்கியுள்ளது ரெட்பஸ். இந்தியாவில் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே உட்பட சில தனியார் நிறுவனங்களும் அந்த பணியை தனித்தனியே கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“கடந்த 2 ஆண்டுகளாகவே டிஜிட்டல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலம் அடைந்துள்ளது. இது பேருந்து மற்றும் ரயில் பயணங்களுக்கு பொருந்தும். அந்த வகையில் இப்போது நாங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவில் களம் இறங்கியுள்ளோம். போட்டியாளர்கள் இருந்தாலும் பயனர் அனுபவம் என்பது இங்கு மிகவும் முக்கியம். நாங்கள் அதில் கவனம் செலுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார் ரெட்பஸ் தலைமை நிர்வாக செயல் அதிகாரி பிரகாஷ் சங்கம்.
ஐந்து முதல் ஆறு மாநில மொழிகளில் இந்த செயலியை அறிமுகம் செய்யவும் ரெட்பஸ் திட்டமிட்டுள்ளதாம்.